நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் அமைந்துள்ள விமான சேவை மையத்தில், தரையிறங்க முயன்ற இரு உலங்கு வானூர்திகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து 250 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சொலுகும்பு மாவட்டத்தில், எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் உள்ள பெரிச்சே (Pheriche) ஹெலிபேடில் பிஷ்டெயில் ஏர் (Fishtail Air) மற்றும் டைனஸ்டி ஏர் (Dynasty Air) ஆகிய இரு தனியார் நிறுவனங்களின் ஹெலிக்கொப்டர்கள் தரையிறங்க முயன்றபோது அவற்றின் இறக்கைகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
தரையிறங்குவதற்குச் சற்று முன்னதாக, இரு உலங்கு வானூர்திகளின் சுழலிகள் ஒன்றோடொன்று மோதி, பனி படர்ந்த தரையில் நொறுங்கி விழுகின்றன.
நேபாளத்தில் சுற்றுலாப் பயணிகள், மலை ஏறுபவர்கள், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் அவசர மீட்புப் பணிகளுக்கு சிறிய ரக ஹெலிக்கொப்டர்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
இருப்பினும், அங்குள்ள கடுமையான நிலப்பரப்பு, விரைவாகக் மாறும் வானிலை மற்றும் மெல்லிய காற்று மண்டலம் காரணமாக ஹெலிக்கொப்டர்களை இயக்குவது மிகுந்த சவாலானதாகவும் அபாயகரமானதாகவும் கருதப்படுகிறது.
மீட்புப் பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடக்கும் அதேவேளையில், விபத்துக்கான உண்மையான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.