வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நாள் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்வதுடன், சில பகுதிகளில் 100 மி.மீக்கும் அதிகமான மழை பெய்யும். வளிமண்டல சுழற்சி மற்றும் அதிவலய உள்-வெப்ப மண்டல ஒருங்கிணைப்பு வலயத்தின் தாக்கம் காரணமாக மேகமூட்டம் மற்றும் மழையும் உருவாகியுள்ள நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை நாட்டில் மழையுடனான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

 குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒக்டோபர் 23ஆம் திகதி அந்தமான் தீவுகளை அண்மித்த பகுதியில் மற்றுமொரு தாழமுக்க வலயமொன்று உருவாக வாய்ப்புள்ளதுடன், இது நேரடியாக இலங்கையைப் பாதிக்காது என்றாலும் இதன் தாக்கத்தால் ஏற்படும் வளிமண்டல மாற்றங்கள் காரணமாகவே தொடர் மழை பெய்யவுள்ளது. மோசமான வானிலை காரணமாக வங்காள விரிகுடாவின் ஆழமான கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடற்படைப் பிரிவினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர் மழையின் காரணமாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நாடு முழுவதும் சுமார் 30,000 இடங்கள், மண்சரிவு அபாயத்திற்கு உள்ளாகக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, கேகாலை, குருநாகல், மாத்தளை போன்ற மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகள் மண்சரிவு எச்சரிக்கை வலயங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதற்கமைய, வீட்டின் சுவர்களில் விரிசல்கள் ஏற்படுதல், நிலத்தில் புதிய நீரூற்றுகள் தோன்றுதல் அல்லது இருக்கும் நீரூற்றுகள் வற்றிப்போதல், சேற்று நீர் வருதல், மரங்கள் அல்லது மின் கம்பங்கள் சாய்ந்து விழுதல் மற்றும் விசித்திரமான சத்தங்கள் கேட்டல் போன்ற மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து, கிராம உத்தியோகத்தர் அல்லது அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்குத் தகவல் வழங்குவது அவசியமாகும்.

கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக 14 பெரிய நீர்த்தேக்கங்களும் 11 நடுத்தர நீர்த்தேக்கங்களும் தற்போது முழுமையாக நிரம்பி வழிவதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 5 பெரிய நீர்த்தேக்கங்களின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் பல்வேறு உயரங்களைக் கொண்ட 8 வான்கதவுகள் திறக்கப்பட்டு, அதன் மூலம் 22,400 கன மீட்டர் நீர் தெதுரு ஓயாவிற்குள் வெளியேற்றப்பட்டு வருவதுடன், இராஜங்கனை நீர்த்தேக்கத்தின் 14 வான்கதவுகள் திறக்கப்பட்டு காலா ஓயாவிற்குள் 14,288 கன மீட்டர் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

இதனால் இராஜாங்கனை, நொச்சியாகம, வண்ணாத்திவில்லு, கருவலகஸ்வெவ ஆகிய செயலகப் பிரிவுகள் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இவற்றுடன் கிம்புல்வன ஓயா குளம், அம்பகொலவெவ மற்றும் அலிகொட்ட அர நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 9 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் அளவை எட்டியுள்ளன என்பதால், தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் பயணிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப அறிவிப்புகள் மாறக்கூடும் என்பதால் பொதுமக்கள் அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளைக் கவனத்துடன் பின்தொடருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.