22ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதத்துக்கும் அதிக காலம் கடந்தும், இன்னும் நீதிமன்றங்களில் காணப்பபடும் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இந்த வெற்றிடங்களை காட்டிக்கொண்டு, நீதிபதிகளிடம்  வேலை வாங்கும் நிலையே இருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (26) இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கிவிட்டு, புதிய அரசியலமைப்பொன்றை  உருவாக்குவதாக அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு  வருடங்கள் கடந்தும்  அதுதொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.

கடந்த வரவு செலவு திட்ட விவாதத்தின்போதும்  புதிய அரசியலமைப்பு தொடர்பில் நான் இந்த சபையில் கேட்டபோது,  உரிய காலத்தில் கொண்டுவருவதாக நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார். அத்துடன் அதுதொடர்பில் குழு அமைப்பதாக பிரதமர் தெரிவித்திருந்தார். ஆனால் அது தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க தவறடிய நீதி அமைச்சர் தனது பொறுப்பை நிறைவேற்ற முடியாமல் போனமைக்காக  பதவி விலகவேண்டும்.

அத்துடன் அரசியலமைப்பின்  22ஆம் திருத்தத்தை கொண்டுவரும்போது, நீதிமன்றங்களில் காணப்படும்  வெற்றிடங்களை  நிரப்புவதற்கும் நீதிமன்ற செயற்பாடுகளை செயற்திறமைமிக்கதாக மாற்றியமைக்கவும் அரசியலமைப்பின்  22ஆம் திருத்தம்  முக்கியமாகும் என்றே அரசாங்க தரப்பினர் தெரிவித்து வந்தனர். ஆனால் 22ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதத்துக்கும் அதிக காலம் கடந்தும், இன்னும் நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

குறிப்பாக உயர் நீதிமன்றத்தில்  4 வெற்றிங்கள் காணப்படுகின்றன. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 9 வெற்றிடங்கள் காணப்படுகின்றன மேல் நீதிமன்றங்களில் 27 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்த வெற்றிடங்கள் எதுவும் இதுவரை நிரப்பப்படாமல், இந்த வெற்றிடங்களை காட்டிக்கொண்டு, நீதிபதிகளிடம்  வேலை வாங்கும் நிலையே இருக்கிறது.

மேலும் இன்று உயர் நீதிமன்றத்தின் நிலை தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் கவலை தெரிவித்து வருகிறார்கள். வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்தளவிலேயே அடிப்படை உரிமை மீறள் தொடர்பான வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. 

ஏனெனில் தொடுக்கப்படும் அடிப்படை உரிமை மீறள் தொடர்பான வழக்குகளில் அதிகமானவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதனால் பாதிக்கப்படும் மக்கள்  வழக்கு தொடுக்க விரும்புவதில்லை. அந்த நிலைக்கு இன்று உயர் நீதிமன்றத்தின் நிலை தள்ளப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு நீதியரசர்கள் குழுவே இந்த வழக்குகளை பரிசீலிக்கின்றது.

அதேபோன்று உயர் நீதிமன்றம். மேல் நீதிமன்றம்., மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் வழக்கு விசாரைக்காக பெயரிடப்படும் நீதிகள் குழாம், தங்களுக்கு தேவையான தீர்ப்பை பெற்றுக்கொள்ளும் வகையிலே நியமிக்கப்படுகிறது. இதனை  வழங்கப்படும் தீர்ப்புகளை பார்க்கும்போதும், நியமிக்கப்படும் நீதிபதிகளை பார்க்கும்போது எங்களுக்கு விளங்கிக்கொள்ள முடியும். ஏனெனில் குற்றங்களுக்கான சட்டம் மாறவில்லை. அப்படி இருக்கும்போது எவ்வாறு தீர்ப்புகள் மாறுபட முடியும்.

அதனால் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முதல் உயர் நீதிமன்றம் வரை அநீதி ஏற்படுவதாக மக்கள் நினைக்கும்போது, அதன் பெறுபேறுகளுக்கு நாங்கள் அனைவரும் முகம்கொடுக்க நேரிடும்.  அதனால்  இந்த பாவமான காரியத்தை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.