நிலையான அமைதியைப் பொறுத்தமட்டில், அது தானாகவே நிலைத்திருக்காது. மாறாக அது எம்மிடமிருந்து எதோ ஒன்றை எதிர்பார்க்கிறது. இனம், மதம், மொழி போன்றவற்றால் பிளவுபட்ட நாட்டை விடுத்து, நமது வீரர்கள் எதற்காகத் தமது உயிரைத் தியாகம் செய்தார்களோ, அதனைப் பிரதிபலிக்கக்கூடிய ஒரு நாட்டை நாம் கட்டியெழுப்பவேண்டும் என்பதே அதன் எதிர்பார்ப்பு என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு இன்றுடன் (18) பதினேழு ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் அலி சப்ரி மேலும் கூறியிருப்பதாவது:
2009 மே மாதம் 18 ஆம் திகதி என்பது ஒவ்வொரு இலங்கையராலும் நன்கு நினைவில் கொள்ளப்படும் ஒரு நாளாகும். அது குண்டுவெடிப்புக்கள் முடிவுக்குவந்த நாள். அது மறுநாள் என்ன நேருமோ என பதற்றத்துடன் வாழ்ந்த குடும்பங்களின் அச்ச் நீங்கிய நாள். நீண்டகாலமாக இரத்தக்கண்ணீர் வடித்த ஒரு நாடு, இறுதியாக நிம்மதிப் பெருமூச்சுவிட்ட நாள். அதனை சாத்தியமாக்கிய சகலரையும் நான் இவ்வேளையில் நினைவுகூருகிறேன். அவர்கள் மிகக்கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, பின்வாங்காமல், தொடர்ந்து முன்நோக்கிச்சென்ற சாதாரண மனிதர்களாவர். அவர்களில் பலர் வீடு திரும்பவே இல்லை. நாம் அவர்களுக்கு 'நன்றி' என்ற சொல்லுக்கு அப்பால் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஆனால் நிலையான அமைதியைப் பொறுத்தமட்டில், அது தானாகவே நிலைத்திருக்காது. மாறாக அது எம்மிடமிருந்து எதோ ஒன்றை எதிர்பார்க்கிறது. அவர்கள் எதற்கான தமது உயிரைத் தியாகம் செய்தார்களோ, அதனைப் பிரதிபலிக்கக்கூடிய ஒரு நாட்டை நாம் கட்டியெழுப்பவேண்டும் என்று அது எதிர்பார்க்கிறது. இனம், மதம், மொழி போன்றவற்றால் பிளவுபட்ட இலங்கை அல்ல. மாறாக ஒவ்வொரு நபரும், அவர் யாராக இருந்தாலும், கண்ணியத்துடனும், சம வாய்ப்புக்களுடனும் வாழ்வதற்கு ஏதுவான ஒரு இலங்கையே அதன் எதிர்பார்ப்பாகும்.
பதினேழு ஆண்டுகளின் பின்னரும் துயரம் மிகுந்த அந்த அத்தியாயத்தை முடிவுக்குக்கொண்டுவருவதற்குப் பங்களிப்புச்செய்த அனைவருக்கும் எனது நன்றியை வெளிப்படுத்துகிறேன். அத்தோடு இந்த நாட்டின் மிகச்சிறந்த தருணங்கள் இன்னமும் எமக்காகக் காத்திருக்கின்றன என்று நான் நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றுமையான நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் !
Ad Space
Ad Space
Ad Space
Ad Space