அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு சட்டமூலத்தில் பல திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சட்டமா அதிபர் இன்று திங்கட்கிழமை (09)  உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தொடர்புடைய திருத்தங்கள் பாராளுமன்றத்தின் குழு நிலையின் போது சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்த சட்டமா அதிபர், அந்தத் திருத்தங்கள் அடங்கிய ஆவணத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயரத்ன இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன, நீதிபதி அச்சல வெங்கப்புலி மற்றும் நீதிபதி சம்பத் அபேயகோன் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட மொத்தம் 26 மனுக்கள் இந்த சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.