தனமல்வில, ஹம்பேகமுவ பகுதியில் மோட்டார் வாகனமொன்றில் உலர்ந்த கஞ்சாவைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று வழிமறித்துச் சோதனையிடப்பட்டது. இதன்போது குறித்த காரினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 43 கிலோகிராம் 200 கிராம் உலர்ந்த கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

காரில் பயணித்த மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவரும், இந்தக் கஞ்சாவை சுற்றிவளைப்பு ஒன்றின் போது கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். எனினும், பொலிஸார் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளில் அத்தகையதொரு சுற்றிவளைப்பு நடத்தப்பட்டமைக்கோ அல்லது கஞ்சாத் தொகையைக் கொண்டு செல்வதற்குச் சட்டபூர்வ அனுமதி பெறப்பட்டமைக்கோ எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதனை அடுத்து இரு மதுவரித் திணைக்கள அதிகாரிகளும், அவர்களுடன் பயணித்த மற்றைய சந்தேகநபரும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் இன்று திங்கட்கிழமை (23) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளில் ஹம்பேகமுவ பொலிஸார்  ஈடுபட்டு வருகின்றனர்.