தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு வலயம், இன்று ( 01) ஞாயிற்றுக்கிழமை காலை 05.30 மணியளவில் தீவிர காற்றழுத்த தாழ்வு தீவிரமடைந்துள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றைய தினம்  காலை நிலவரப்படி, இத்தொகுதி வட அட்சரேகை 11.5°N மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 86.4°E பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நண்பகல் 11.30 மணியளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக தீவிரமடைந்துள்ளது.   

தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து கடும் புயலாக  உருவெடுத்து, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (03) காலை 05.30 மணியளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால், கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

அட்சரேகை 10N - 15N மற்றும் தீர்க்கரேகை 80E - 90E ஆகிய எல்லைகளுக்குட்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை செல்ல வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அப்பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கப்பல்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.