கொழும்பு, பத்தரமுல்லயில் கடந்த மே 18ஆம் திகதி ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்கள் குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்றைய தினம் தலாங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு வீரவன்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தானும் தனது குழுவினரும் கைது செய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் மே 19ஆம் திகதி நடைபெறவிருந்த போர் வெற்றி நாள் இறுதி ஒத்திகை நடவடிக்கைகள் மைதானத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்த போதே இந்த சர்ச்சைக்கரிய சம்பவம் பதிவாகியுள்ளது.
வீரவன்ச தலைமையிலான சுமார் 35 பேரடங்கிய குழுவினர், ஒத்திகை நடவடிக்கைகளுக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கும் இடையூறு விளைவித்து, தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் பலவந்தமாக நுழைய முயன்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமது குழுவினரை பொலிஸார் தடுத்தமைக்கு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள வீரவன்ச, இது குறித்து பாதுகாப்பு அமைச்சுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
குடிமக்களுக்கு உள்ள உரிமையின் அடிப்படையில், வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ள பொது இடத்திற்குச் செல்வதற்கு அனுமதி பெற வேண்டுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உயிரிழந்த இராணுவத்தினருக்கு மலர்க்கொத்து வைப்பதற்குக் கூட அனுமதி பெற வேண்டிய ஒரு யுகமாக மாறியுள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு தடைகள் வந்தாலும் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை கௌரவிப்பதை எவராலும் தடுக்க முடியாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
கடும் அச்சத்தில் விமல் வீரவன்ச
Ad Space
Ad Space
Ad Space
Ad Space