எரிபொருள் விலைகள் அண்மையில் உயர்த்தப்பட்ட போதிலும், பஸ் கட்டணங்களில் எவ்வித திருத்தமும் செய்யப்பட மாட்டாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கருத்து தெரிவிக்கையில்,  

பஸ் கட்டண திருத்த சூத்திரத்தின்படி, கட்டணங்களை உயர்த்துவதற்கு எரிபொருள் விலை அதிகரிப்பு குறைந்தபட்சம் 4% என்ற வரம்பை எட்ட வேண்டும். 

ஆனால், தற்போதைய விலை அதிகரிப்பு இந்த 4% வரம்பை எட்டவில்லை என்பதால், இந்தச் சந்தர்ப்பத்தில் பஸ் கட்டணங்களை உயர்த்த சட்டரீதியான அதிகாரம் இல்லை.  

எனினும், பஸ் தொழில் ஏற்கனவே பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

டீசல் விலை 5 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதை நாங்கள் அறிவோம். இதன்படி, ஒரு லீட்டர் டீசலின் விலை இதுவரை மொத்தம் 15 ரூபாவால் அதிகரித்துள்ளது. இது பஸ் தொழில்துறைக்கு மேலும் நஷ்டத்தையே ஏற்படுத்தியுள்ளது.

கட்டண திருத்த சூத்திரத்தின் கீழ் 4% வரம்பை எட்டும்போது மட்டுமே பஸ் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்ற கொள்கை முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.

தற்போதைக்கு அந்த 4% வரம்பு எட்டப்படவில்லை. எனவே, பஸ் கட்டணங்களை உயர்த்த எங்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி இல்லை.

எனினும், நஷ்டத்திலும் பஸ் தொழிலை தொடர்ந்து நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். 

பொதுவாக, குறுந்தூர சேவைப்  பேருந்துகளுக்கு நாளொன்றுக்கு சுமார் 1,000 ரூபாவும், நீண்டதூர சேவைப் பேருந்துகளுக்கு நாளொன்றுக்கு சுமார் 2,000 ரூபாவும் நஷ்டம் ஏற்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.