"கத்தோலிக்கர்கள் போலியானவர்களைக் கண்டு ஏமாறக்கூடாது" - நீர்கொழும்பில் இயேசு கிறிஸ்து வேடமணிந்து நடமாடியவர்.....!
Ad Space
Ad Space
நாட்டில் உள்ள கத்தோலிக்கர்கள் போலியானவர்களைக் கண்டு ஏமாறக்கூடாது என இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவுறுத்தியுள்ளது.
நீர்கொழும்பில் இயேசு கிறிஸ்துவைப் போல உடையணிந்து வேடமிட்டு, நடமாடிய வெளிநாட்டவரால் அப்பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த திருச்சபையின் செய்தித் தொடர்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் புத்திசாலித்தனமாக செயற்படவேண்டும். போலிகளால் ஏமாறக்கூடாது என்றும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.
குறித்த வெளிநாட்டவர் நீர்கொழும்பில் உள்ள தேவாலயங்களுக்குள் நுழைந்து மக்கள் மத்தியில் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.
அவர் கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மத்தியில் சென்று குழப்பத்தை ஏற்படுத்தினார். அவர் அங்கு சென்றதும் சிலர் அவரிடம் சென்று வணங்கியதாக ஒருவர் கூறியிருந்தார்.
அதனையடுத்து, நீர்கொழும்பு கிராண்ட் ஸ்ட்ரீட் தேவாலயத்துக்கும் சென்றுள்ளார். அவ்வேளை அங்கிருந்த மதகுருக்கள் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் அளித்துள்ளனர்.
அதன் பின்னர், பொலிஸார் அந்த வெளிநாட்டவரை அங்கிருந்து வெளியேற்றியதாகவும் பின்னர், அவர் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த, மக்கள் அதிக விழிப்புடன் இருக்கவேண்டும். கத்தோலிக்கர்கள் பைபிளில் போதிக்கப்படுவதைப் புரிந்துகொள்ளவேண்டும். போலிகளைக் கண்டு ஏமாறக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
Ad Space
Ad Space