கரவைவலை மீனவர்களின் போராட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல்பத்திரம் நிராகரிப்பு
Ad Space
Ad Space
டிராக்டர்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் கரவை வலை மீனவர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகத் தெரிவித்து, போராட்டத்தை நிறுத்துவதற்கு உத்தரவிடுமாறு கோரி கோட்டைப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் செவ்வாய்க்கிழமை (10) கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது.
டிராக்டர்களில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கரவை வலை மீன்பிடி நடவடிக்கைக்குத் தற்போதைய அரசாங்கம் தடைவிதித்துள்ள நிலையில், தமது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த குறித்த தடை உத்தரவை மீளப் பெறுமாறு வலியுறுத்தி கரவை வலை மீனவர் சங்கத்தினர் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகத் தெரிவித்து கோட்டை பொலிஸார் மேற்படி போராட்டத்தை நிறுத்துவதற்கு உத்தரவிடுமாறு கோரி நீதவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (10) மேற்படி நகர்த்தல் பத்திரத்தைக் கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார நிராகரித்திருந்தார். பொதுமக்கள் அமைதியான முறையில் தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும். போராட்டத்தில் ஈடுபடுவது மக்களின் உரிமை எனத் தெரிவித்து மேற்படி நகர்த்தல் பத்திரத்தை நிராகரித்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைச் சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தை மீறி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபடுவார்களாயின் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
பல நாட்களாக மீனவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் இடையூறுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், இன்று ஆறாவது நாளாகவும் போராட்டம் தொடர்வதாக நீதிமன்றத்துக்குத் தெரிவித்திருந்த பொலிஸார் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
Ad Space
Ad Space