தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேற்று வைத்தியசாலையாகக் கருதப்படும் கராப்பிட்டிய மகப்பேற்று போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகளை, சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக்க விஜேமுனி அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டார்.
ஜேர்மன் - இலங்கை நட்புறவு மகப்பேற்று வைத்தியசாலை என அழைக்கப்படும் இந்த வைத்தியசாலையில், நிலவும் குறைபாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
600 கட்டில்கள், 06 சத்திரசிகிச்சை கூடங்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளைக் கொண்ட இந்த வைத்தியசாலையின் தற்போதைய இயக்கம் குறித்து பிரதி அமைச்சர் இதன்போது கேட்டறிந்தார்.
வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கே.எம். சோமரத்ன தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில், மகப்பேற்று இறப்பு விகிதம், சிசு இறப்பு விகிதம் மற்றும் மனித வள மேலாண்மை குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
வைத்தியசாலைகளில் தற்போதுள்ள பழைய இயந்திரங்களுக்குப் பதிலாக, நவீன தொழில்நுட்பத்துடனான புதிய இயந்திரங்களை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.
மேலும், 2027ஆம் ஆண்டுக்காகத் திட்டமிடப்பட்டுள்ள வைத்தியசாலை அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் தாதியர் விடுதி நிர்மாணப் பணிகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
வைத்தியசாலைகளின் கட்டிடங்களை நிர்மாணிக்கும் போது, அவற்றுக்குத் தேவையான இயந்திர உபகரணங்கள் மற்றும் போதிய ஊழியர் வளங்களையும் உள்ளடக்கிய ஒரு முறையான திட்டமிடல் அவசியம் என பிரதி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த அமரவீர, சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் எஸ். ஸ்ரீதரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், வைத்தியசாலை ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
கராப்பிட்டிய மகப்பேற்று வைத்தியசாலையின் செயற்பாடுகளை பார்வையிட்டார் சுகாதார பிரதி அமைச்சர்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space