உக்ரைன் - ரஷ்யா இரு தரப்பு போர்த் தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில், போர்க்களத்தில் தனது கால்கள் இரண்டையும் இழந்து, 491 நாட்கள் உயிருக்கு போராடி வந்த உக்ரைன் இராணுவ வீரர் ஒருவர் ட்ரோன் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்ட செய்தி தற்போது வைரலாகி வருகிறது. 

பெரும் போராட்டத்துக்கு மத்தியில் ஒரு இராட்சத ட்ரோன் வான்வழியாக, இந்த வீரரை மீட்டெடுத்துள்ளது. 

ஒரு ட்ரோன் மூலம் ஒருவர் வான்வழியாக உயிருடன் மீட்கப்பட்டமை, வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. 

உக்ரைன் நாட்டின் 30வது மெஷினரி படைப்பிரிவு வீரரான கொன்ஸ்டான்டின் விளாசென்கோ (வயது 49) கடந்த பெப்ரவரி மாதம் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள குபியான்ஸ்க் அருகில் வெர்டன் என்கிற பகுதியில் இடம்பெற்ற போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் தனது இடது காலை இழந்தார். 

அதன் பின்னர், அவரது வலது காலும் படுகாயமடைந்த நிலையில், அந்தக் காலுக்கு தொற்று ஏற்பட்டு, அது உடல் முழுவதும் பரவிவிடக்கூடாது என்பதற்காக, தானே தனது வலது காலையும் வெட்டி அகற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு கால்களையும் இழந்துவிட்ட நிலையில், அவர் குறித்த பகுதியில் தனித்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்துள்ளார். 

அதன் பின்னர், அவர் அந்த இடத்தில், ரஷ்யாவின் தாக்குதலால் இடிந்து விழுந்திருந்த ஒரு பழைய பாடசாலைக் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் காணப்பட்ட பதுங்கியிருந்துள்ளார். 

வெறும் 80 x 60 செ.மீ அகலம் கொண்ட அந்த சிறிய குழியில் சுமார் 8 மாதங்களாக அவர் உடலை குறுக்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

அதனையடுத்து, அவரை மீட்பதற்காக பல வழிகளில் உக்ரைன் இராணுவம் முயற்சித்தது. அவரை மீட்பதற்காக அனுப்பப்பட்ட இரண்டு ரோபோக்களும் ரஷ்யாவின் தாக்குதலில் அழிக்கப்பட்டன. 

அதனைத் தொடர்ந்து, அந்த வீரர் பதுங்கியிருக்கும் இடம் கண்டறியப்பட்டு, அவருக்கான உணவு, தண்ணீர், வாசிப்பதற்கு ஸ்டீபன் கிங் எழுதிய நாவல் என்பன ஒரு சிறிய ட்ரோன் மூலம் அனுப்பிவைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

கடந்த 4ஆம் திகதி மனித எடையை தாங்கக்கூடிய திறன் வாய்ந்த இராட்சத ட்ரோனான Ayudag 6, உடலில் கயிறு கட்டப்பட்ட நிலையில் குறித்த வீரரை வான்வழியாக தூக்கி மீட்டெடுத்துள்ளது. 

இரண்டு கால்களையும் இழந்த அந்த வீரரை சுமார் 70 மீட்டர் உயரம் வரை தூக்கிக்கொண்டு, 15 கி.மீ தூரத்துக்கு பயணித்த ட்ரோன், குறிப்பிட்டதொரு பாதுகாப்பான இடத்தில் அந்த வீரரை இறக்கியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 

தற்போது அந்த போர்வீரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.