“கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 5,000-க்கும் அதிகமான பொது மக்கள் அரசு பேருந்துகள் இல்லாமல் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்துள்ளனர். திமுகவினருக்கு ஏற்பட்ட தோல்வி பயத்தினால் மக்கள் வெளியூர் செல்வது தடுக்கப்படுகிறதா என்று எண்ணத் தோன்றுகிறது” என அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் நேற்று இரவு முதல் இயக்கப்படாததால், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் மிகவும் அவதியடைந்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 5,000-க்கும் அதிகமான பொதுமக்கள் அரசு பேருந்துகள் இல்லாமல் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து உள்ளனர். பயணிகள் குடிதண்ணீர் கூட கிடைக்காமல் பரிதவித்துள்ளனர்.
அதேபோன்று திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து வாக்களிக்கச் செல்ல பேருந்துகள் இல்லாமல் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் பேருந்து வசதி இல்லாமல் இதே அவல நிலைதான் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் நடைபெறும் நாளில் அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கு ஏன் எந்த நடவடிக்கையையும் இந்த அரசு எடுக்கவில்லை. திமுகவினருக்கு ஏற்பட்ட தோல்வி பயத்தினால் மக்கள் வெளியூர் செல்வது தடுக்கப்படுகிறதா என்று எண்ணத்தோன்றுகிறது.
ஒவ்வொரு மனிதனும் வாக்களிப்பது அவர்களது ஜனநாயக உரிமை. அதை தடுக்கும் விதத்தில் செயல்படுகின்ற திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். திமுகவினர் தமிழகத்தில் வாக்குப்பதிவு அதிகரிப்பதை தடுப்பதற்கு ஏதாவது தில்லுமுல்லுகளை அரங்கேற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். தமிழக வாக்காளர்கள்தான் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
“கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் இன்றி தவித்த 5,000 பேர்...” - தோல்வி பயமே காரணம் என சசிகலா சாடல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space