கிளிநொச்சி ஏ-9 வீதியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடகவியலாளர் சங்கத்தின் காணியையும் கட்டடத்தையும் (Kilinochchi Press Club) இராணுவத்திடமிருந்து விடுவித்துத் தருமாறு கோரி, சிறிலங்கா ஜனாதிபதிக்கு கிளிநொச்சி ஊடக அமையம் கடிதம் எழுதியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் முழுநேர, பகுதிநேர ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய இந்த அமைப்பினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாத மீள்குடியேற்றத்தைத் தொடர்ந்து, எமது நிர்வாகக் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டு இன்று வரை நாம் ஒரு சிவில் அமைப்பாக இயங்கி வருகின்றோம்.
முன்னதாக, 2008ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது ஊடகவியலாளர் அமைப்பு இயங்கி வந்த காலத்தில், கிளிநொச்சி ஏ-9 வீதியில் 'காக்கா கடை' சந்திக்கு அருகில் எமக்குச் சொந்தமாக சுமார் கால் ஏக்கர் காணியும், அலுவலகக் கட்டடமும் காணப்பட்டன. எமது அனைத்து ஊடகப் பணிகளும் அந்த வளாகத்திலிருந்தே முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இருப்பினும், இப்பகுதி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததிலிருந்து, எமக்குச் சொந்தமான காணியும் கட்டடமும் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றன. எமது காணியைச் சூழவுள்ள யோகர் சுவாமிகள் நிலையம் மற்றும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு காணிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளபோதிலும், கிளிநொச்சி ஊடகவியலாளர் அமையத்துக்குச் சொந்தமான காணி இதுவரை விடுவிக்கப்படவில்லை.
இக்காணியை விடுவிக்குமாறு கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அடுத்தடுத்த அரசாங்கங்களுக்கு நாம் எழுத்துப்பூர்வமாக பல கோரிக்கைகளை விடுத்திருந்தபோதிலும், இதுவரை எந்தவொரு சாதகமான முடிவும் எட்டப்படவில்லை.
எனவே, தற்போது நாட்டில் பல்வேறு நேர்மறையான சீர்திருத்தங்களை முற்போக்கான முறையில் நடைமுறைப்படுத்தி வரும் தங்களின் மீது நாம் மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளோம்.
எனவே, எமது தொழில்சார் ஊடகப் பணிகளை மிகவும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு ஏதுவாக, பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள எமது காணியையும் அலுவலகக் கட்டடத்தையும் விடுவித்துத் தருவதற்கு ஆவன செய்யுமாறு ஜனாதிபதியிடம் மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதிகள் ஊடக அமைச்சர் வடக்கு மாகாண ஆளுநர், கடற்றொழில் அமைச்சரான கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், துரைராஜா ரவிகரன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், கரைச்சி பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி ஊடகவியலாளர் சங்கத்தின் காணியையும் கட்டடத்தையும் விடுவிக்குமாறு சிறிலங்கா ஜனாதிபதிக்கு கடிதம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space