குப்பை கொட்ட நாயைப் பயன்படுத்திய உரிமையாளர் : இத்தாலியில் வினோதக் குற்றச்சாட்டு!
Ad Space
Ad Space
இத்தாலியின் சிசிலி மாகாணத்தில் உள்ள கட்டானியா நகரில், தனது வளர்ப்பு நாயைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக வீதியோரத்தில் குப்பைகளைக் கொட்டிய நபரொருவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கட்டானியாவின் சான் ஜோர்ஜியோ மாவட்டத்தில் உள்ள வீதி ஒன்றில், நாய் ஒன்று தனது வாயில் ஒரு குப்பை பையை கவ்விக்கொண்டு நிதானமாக நடந்து சென்று வீதியோரம் அந்தப் பையைப் போட்டுவிட்டுச் செல்வது அங்குள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
ஒரே நாய், தொடர்ந்து இரண்டு நாட்களாக இதேபோல் குப்பைகளைக் கொண்டு வந்து போடுவது காணொளியில் உறுதியாகியுள்ளது.
குப்பை கொட்டுபவர்களைப் பிடிக்க கமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை அறிந்த அதன் உரிமையாளர், தான் சிக்காமல் இருக்க நாய்க்கு இதற்காகப் பிரத்யேகமாகப் பயிற்சி அளித்துள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
"இந்தக் காட்சிகள் சந்தேகத்திற்கு இடமில்லாத ஆதாரங்களாக உள்ளன" என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியில் வீதிகளில் குப்பை கொட்டுவது சட்டப்படி குற்றமாகும்.
இந்தச் சம்பவம் குறித்து கட்டானியா நகராட்சி தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில்,
"புத்திசாலித்தனம் என்பது ஒருபோதும் நாகரீகமற்ற செயலுக்கு சாக்காகிவிட முடியாது. நகர்ப்புற ஒழுக்கத்தையும் சுற்றுப்புறச் சூழலையும் மதிப்பது அனைவரது கடமையாகும்" என பதிவிட்டுள்ளது.
Ad Space
Ad Space