ஜேர்மனியில் குறைவான எரிபொருளே கையிருப்பில் இருந்தாலும், சமாளிக்க முடியும் என எரிவாயு இறக்குமதி நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் குளிர்காலம் நெருங்கும் நிலையில், எரிவாயு கையிருப்பு 57 சதவிகிதம் மட்டுமே உள்ளது.
இது சராசரி ஐரோப்பிய கையிருப்பைவிட மிகவும் குறைவு ஆகும்.
ஆக, குளிர்காலம் நெருங்கும் நிலையில், இந்த அளவு எரிபொருளுடன் குளிர்கால தேவைகளை சமாளிக்க முடியுமா என கேள்வி எழுந்துள்ளது.

முடியும் என்கிறார், ஜேர்மன் எரிவாயு இறக்குமதி நிறுவனமான VNG நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலரான Ulf Heitmueller.
சேமிப்பில் எவ்வளவு எரிவாயு உள்ளது என்பது மட்டுமே எரிபொருள் நிலையை தீர்மானிப்பதில்லை என்கிறார் அவர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து ரஷ்ய எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட, ஜேர்மனி சிக்கலை எதிர்கொண்டது.
ஆனால், அதைத் தொடர்ந்து, நோர்வே, அல்ஜீரியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளுடன் எரிபொருள் தொடர்பில் ஒப்பந்தங்கள் செய்துகொண்டதையடுத்து, அங்கிருந்தெல்லாம் எரிவாயு கிடைக்கும் என்பதால், குளிர்கால எரிபொருள் தேவை குறித்து கவலைப்படவேண்டாம் என்கிறார் Ulf Heitmueller.
என்றாலும், இறக்குமதியால் ஏற்படும் நஷ்டம், உலகளாவிய எரிபொருள் சந்தையில் தட்டுப்பாடு, உள்கட்டமைப்பு பிரச்சினைகள் இவற்றுடன் குளிரும் சேர்ந்துகொண்டால், இந்தக் குளிர்காலத்தில் எரிபொருள் விலை உயரக்கூடும் என்கிறார் அவர்.