“குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு” ; மனைவியை வற்புறுத்தி தீ வைக்கச்செய்த கணவர் கைது!
Ad Space
Ad Space
“குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு” என வற்புறுத்தி, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைக்கச் செய்த கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதோடு, தீக்காயத்துக்குள்ளான மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயில் எரிந்து படுகாயமடைந்த மனைவி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு முனைக்காடு பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (17) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையினூடாக தெரியவருவதாவது:
கூலித் தொழிலாளியான 36 வயதுடைய கணவன் தனது மனைவியிடம் (31) தீப்பெட்டியைக் கொடுத்து, “உனக்கு நீயே தீ வைத்துக்கொள்” என வற்புறுத்தி, மனைவி மீது தீப் பற்றியெரியச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கணவன் - மனைவிக்கு இடையேயான பணப் பிரச்சினை காரணமாக முதலில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, பின்னர், மனைவி மீது கணவன் கொண்ட சந்தேகமே விபரீதத்துக்கு கொண்டுசென்றது என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
மனைவியை தீ வைக்கச் செய்தமை, பின்னர், தனக்குத் தானே கூரிய ஆயுதத்தால் குத்திக் காயப்படுத்திக்கொண்டமை, மனைவியையும் கொல்ல முயற்சித்தமை உள்ளிட்ட குற்றங்களின் கீழ் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (18) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space