குவைத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட போதைப்பொருள் ஒழிப்புச் சோதனைகளின் போது, மூன்று இலங்கைப் பிரஜைகள் உட்பட ஏழு சந்தேகநபர்கள் பெருமளவிலான போதைப்பொருட்களுடன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட முற்றுகைகளின் போதே இந்த ஏழு பேரும் கைது செய்யப்பட்டதாகக் குவைத் உள்நாட்டு விவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, கைது செய்யப்பட்டவர்களில் மூன்று இலங்கையர்கள், இரண்டு குவைத் நாட்டுப் பிரஜைகள், ஓர் இந்தியப் பிரஜை மற்றும் மேலும் இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் உள்ளடங்குவதாகத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 2.55 கிலோகிராம் ஹஷீஷ் , 150 கிராம் ஹெரோயின் மற்றும் 20 கிராம் மெத்தம்பேட்டமைன் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றுடன், போதைப்பொருட்களைப் பொதி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் விசேட உபகரணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 6,350 லிரிகா மாத்திரைகள், 150 செனக்ஸ் மாத்திரைகள், 50 மெத்தடோல் மாத்திரைகள், நான்கு தராசுகள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்திற்குப் பயன்படுத்தப்படும் பெருமளவிலான பைகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்படவிருந்த போது, சந்தேகநபர்களில் ஒருவர் பாதுகாப்புப் பிரிவினரின் கடமைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டதால் அவர் மீது தனியாக மற்றுமொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் உட்படக் கைது செய்யப்பட்ட ஏழு சந்தேகநபர்களும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பல இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் உபகரணங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் குவைத் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகத் தங்களின் பாதுகாப்புச் சோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் எனவும், இவ்வாறான போதைப்பொருள் அபாயங்களில் இருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்குத் தங்களின் அரசாங்கம் முழுப் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் குவைத் உள்நாட்டு விவகார அமைச்சு மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், விநியோகம் அல்லது பயன்பாடு ஆகிய எவ்விதமான சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக எவ்வித தாராளமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டுச் சட்ட அமலாக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குவைத்தில் போதைப்பொருட்களுடன் மூன்று இலங்கையர்கள் உட்பட 07 பேர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space