அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாகிரகப் போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (12) அங்கு திரண்ட பொதுமக்கள், போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் அங்கு திரண்ட பொதுமக்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக பதற்றத்தைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த நவம்பர் 7ஆம் திகதி ருவன்வெலிசாய விகாரைக்கு அருகிலுள்ள தானசாலை வளாகத்தில் கஸ்ஸப்ப தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் நவம்பர் 11ஆம் திகதி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.