உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதாகக் குற்றஞ்சாட்டி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டோருக்கு எதிராக டிரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அமைப்பு உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

மருந்துக் கொள்வனவில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல்களுக்காக, கெஹெலிய ரம்புக்வெல்ல 75 மில்லியன் ரூபாயையும், முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் அதிகாரிகள் மூவர் தலா 50 மில்லியன் ரூபாயையும் அரசாங்கத்துக்கு இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என கடந்த மார்ச் 27ஆம் திகதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும், குறித்த உத்தரவைப் பிரதிவாதிகள் நடைமுறைப்படுத்தவில்லை என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால், 2024ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் 105(3) பிரிவின் கீழ் உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்த அமைப்பு கோரியுள்ளது.