அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிற்சங்கங்களின் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை எனத் தெரிவிப்பது இயல்பானதே. அதேவேளை, வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் போராடுவது தொழிற்சங்கங்களின் பொறுப்பாகும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (24)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பல தலைவர்கள் முன்னர் தொழிற்சங்கத் தலைவர்களாகச் செயற்பட்டவர்கள். ஆனால், தற்போது அரசாங்கத்தில் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பின்னர், தொழிற்சங்கங்களின் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தின் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டவர்கள் அவ்வாறுதான் செயற்படுவார்கள். அதேநேரம், தொழிற்சங்கங்களும் அரசாங்கத்துக்கு அடிபணியப் போவதில்லை எனத் தெரிவிப்பது இயல்பானதாகும்.

தொழிற்சங்கங்களின் பிரதான பொறுப்பு வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்வதாகும். அவற்றை அதிகரித்துக்கொள்வதற்காக அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடுவது தொழிற்சங்கங்களின் பிரதான ஆயுதமாகும்.

தற்போதைய வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக மக்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்துவது ஆச்சரியமான விடயமல்ல. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், அதிகரித்த வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச்சுமை ஆகியவற்றைக் கருத்திற்கொள்ளும்போது அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் நியாயமானதாகும்.

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது. அதன் பரிந்துரைகளுக்கு அமைய சம்பளங்களையும் கொடுப்பனவுகளையும் அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது. எனவே, அதற்காக அரசாங்கத்துக்கு ஒரு கால அவகாசத்தை வழங்குவது பொருத்தமானதாகும்.

அதேவேளை, வட்டி வீதங்களை அதிகரிப்பது பொருட்களின் விலைகள் மேலும் உயர்வதற்கு வழிவகுக்கும். குறிப்பாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்கள் உள்ளிட்ட உற்பத்தித் துறையினர் பாதிக்கப்படுவர். உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பதால் வணிகர்களும் விலைகளை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும். இதன் சுமையை இறுதியில் பொதுமக்களே எதிர்கொள்ள நேரிடும்.

வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் எதிர்பார்த்த நிவாரணங்கள் கிடைக்காதபோது எந்தவொரு அரசாங்கமும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தற்போதைய அரசாங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல. முந்தைய அரசாங்கங்களும் இத்தகைய விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன என்றார்.