சென்னை மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார். அவருக்கு வயது 75. இன்று பிற்பகல் 2.24 மணிக்கு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் முழுவதும் வி.எஸ்.பாபு பிரபலம் அடைந்தார். ஒரு மாதமாக நடந்து வந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்ற அவருக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தேவைக்கு ஏற்ப செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பல்துறை மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். செப்டம்பர் 23-ம் தேதி முதல்வர் விஜய் மருத்துவமனைக்கு சென்று வி.எஸ்.பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார். பல நாட்களாகவே அவரது உடல்நிலை குறித்த எந்தத் தகவலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டவில்லை. அந்தச் சூழலில், கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று பிற்பகல் 2.24 மணிக்கு வி.எஸ்.பாபு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தனது அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஆளுநர் இரங்கல்: ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் இரங்கல்: “கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபுவின் திடீர் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
வி.எஸ்.பாபுவின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
யார் இந்த வி.எஸ்.பாபு?
ஒரு காலத்தில் வட சென்னை திமுகவில் அசுர சக்தியாக இருந்தவர் வி.எஸ்.பாபு. வட சென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்த இவர், 2006 சட்டப்பேரவை தேர்தலில் புரசைவாக்கத்தில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.
2011-ல் புரசைவாக்கம் தொகுதி நீக்கப்பட்டு கொளத்தூர் தொகுதி உதயமானது. 2011-ல் ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிட்டதால் அப்போது வி.எஸ்.பாபுவுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருப்பினும் கொளத்தூரில் ஸ்டாலினின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார் பாபு.
அந்த சமயத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பி.கே.சேகர்பாபு, புதிய வரவாக திமுகவுக்கு வந்தார். அவருக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததால் 2011 தேர்தலுக்குப் பிறகு ஸ்டாலினை எதிர்த்துக் கொண்டு திமுகவில் இருந்து விலகிய வி.எஸ்.பாபு, அதிமுகவில் இணைந்தார். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவிலும் அவருக்கான முக்கியத்துவம் குறைந்து போனது.
இதன் தொடர்ச்சியாக, 2017-ல் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக களப்பணி செய்ததாகக் கூறி, 2018-ல் வி.எஸ்.பாபு உள்ளிட்ட 168 பேர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். அதன்பிறகு அமைதி காத்த பாபு, இபிஎஸ் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதும் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். ஆனாலும், அதிமுகவிலும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால், அதிருப்தியில் இருந்து வந்த வி.எஸ்.பாபு, பின்னர் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து அக்கட்சியில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது நினைவுகூரத்தக்கது.