தான் எழுதிய நூலகள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். நடுகல், பயங்கரவாதி, சயனைட், எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன் போன்ற நூல்கள் இந்தியாவில் இருந்து கப்பலில் பொதியாக வந்தவேளையில், 'இலங்கையின் ஒற்றுமைக்கு பாதிப்பானவை' என்று காரணம் கூறப்பட்டு இலங்கை சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டடுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கும் பட்சத்திலேயே புத்தகங்கள் விடுவிக்கப்படும் என்று சுங்கப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வனின் நூல்கள் : தொடரும் சிக்கல்கள்.. | Books By Deepachelvan Who Is Detained In Colombo   இது தொடர்பில் எழுத்தாளர் தீபச்செல்வன் கருத்து தெரிவிக்கையில், ஒருபுறம், எமது இனத்தின் வாழ்நிலை மிகவும் நெருக்கடியும் போராட்டமும் கொண்டது எனில், மறுபுறம் அதனை எழுதுவதும் புத்தகமாக அவை பரிமாறப்படுவதும் கூட போராட்டமாகியதை உணர்கையில் மிகுந்த வேதனையும் அயர்ச்சியும் அடைந்தேன். ஈழ மண்ணில் ஒரு எழுத்தாளனாக வாழ்வது என்பது மிகவும் நெருக்கடியானது என்பதை மீளவும் மீளவும் எதிர்கொள்கிறேன் என்றார்.

நடடிக்கை எடுப்பதாக அரசியல்வாதிகள் உறுதி

இந்த நிலையில் தீபச்செல்வனின் நூல்களை உடன் விடுவிக்க வேண்டும் என்று சிங்கள எழுத்தாளர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக குரல் கொடுத்து வருகின்றனர். இதனையடுத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தீபச்செல்வனைத் தொடர்புகொண்டு அறிவித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீபச்செல்வனின் நூல்கள் : தொடரும் சிக்கல்கள்.. | Books By Deepachelvan Who Is Detained In Colombo அத்துடன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனும் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

எழுத்தாளரின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம்

இதன்போது, எழுத்தாளர் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் எழுதிய கடிதம், "நான் ஒரு எழுத்தாளன். கிளிநொச்சியில் வசித்து வருகிறேன். போர்ச் சூழலில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று பல்கலைக்கழகம் சென்று தற்போது ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். போரால் எங்கள் வாழ்வும் காலமும் அழிக்கப்பட்டது. போரில் எனது சகோதரன் ஒருவர் வீரராக சாவடைந்தார். கடந்த கால அனுபவங்கள், நினைவுகளை எதிர்காலத்திற்கான பாடமாக அமைய வேண்டும் என்பதற்காக நாவல்களாகவும் கவிதைகளாகவும் எழுதி வருகிறேன். இந்த நிலையில் சென்னையில் இருந்து அனுப்பட்ட எனது புத்தகங்கள் 360 சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பதாக காரணம் கூறப்பட்டுள்ளது. இவை நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக ஒருபோதும் எழுதப்பட்டவையல்ல. அத்துடன் எந்தவொரு அமைப்பையும் மீளமைக்கும் விதத்தில், நான் புத்தகங்களை எழுதவில்லை. கடந்த போர்க்காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், குழந்தைகள் மற்றும் முன்னாள் போராளிகள் பற்றிய கதைகளையே எனது நாவல்களில் எழுதியுள்ளேன். அவற்றை வெளிக்கொணர்ந்து போரால் பாதிக்கப்பட்ட சமூகத்தை வளப்படுத்துவதற்கு ஒரு படைப்பாளியாக என்னாலான எளிய பங்களிப்பை எழுத்தில் வழங்குகிறேன்.     கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கில் தமிழ் மக்கள், படைப்பாளிகள் மாத்திரமின்றி புத்தகங்களும் தண்டனைக்கும் விசாரணைக்கும் உள்ளாகின. ஆனால் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் ஆட்சியில் நாம் முழுமையான சுதந்திரத்துடன் வாழவும் எழுவும் முடியும் என்ற நம்பிக்கையை இன்னுமும் பற்றிக் கொண்டுள்ளோம். எனது எழுத்துக்கள் மிகுந்த நியாயம் கொண்டவை என்பதால் சிங்கள மக்கள் மத்தியிலும் எனக்கு நிறைய வாசகர்கள் உள்ளனர். இப்போது தடுத்து வைக்கப்பட்ட எனது நூல்களில் சில சிங்களத்திலும் வெளியாகி உள்ளன. அவற்றைப் படித்த சிங்கள மக்கள் எனது வீடு தேடி வந்துள்ளனர். எழுத்தில் வழியாக இரண்டு இனங்களுக்கும் இடையில் பரஸ்பர உணர்வுப் பரிமாற்றத்தை ஏற்படுத்தி நல்ல புரிதலை ஏற்படுத்துவதே எனது நோக்கமாகும். கவிதை, எழுத்து, கலைகள்மீது மிகுந்த ஈடுபாடும் மதிப்பும் கொண்டுள்ள தாங்கள், நல்லெண்ணம் கொண்டு செயற்படும் எனது நூல்களை, விடுவிக்க ஆவணை செய்யுமாறு தங்களை பணிவுடன் வேண்டுகிறேன்." என்றும் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.