அமெரிக்காவின் தலைநகர் வொஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஈஸ்ட் பொட்டோமாக் பூங்காவில் கோல்ஃப் மைதானத்தைப் புதுப்பித்து சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கான ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக பூங்காவில் இருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவலின்படி, சுமார் 430 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதற்கு எதிராக சுற்றுச்சூழல் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியப் பாதுகாப்பு அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ஈஸ்ட் பொட்டோமாக் பூங்காவை சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தக்கூடிய நவீன கோல்ஃப் மைதானமாக மாற்றுவதற்கு டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக தற்போதுள்ள பொது கோல்ஃப் மைதானத்தை மறுசீரமைப்பதுடன், பூங்காவின் இயற்கை மற்றும் வரலாற்றுச் சிறப்புகளைப் பாதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக எதிர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக டி.சி. பாதுகாப்பு லீக் அமைப்பும் இரண்டு உள்ளூர் கோல்ஃப் விளையாட்டு வீரர்களும் இணைந்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி அனா ரெயஸ், பூங்காவில் மேலும் மரங்களை வெட்டுவதற்கும், அவற்றைச் சேதப்படுத்துவதற்கும் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், வழக்கு விசாரணை தொடரும் காலப்பகுதியில் பூங்காவின் அமைப்பு அல்லது நிரந்தர அம்சங்களில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன்னதாக குறைந்தது 10 வேலை நாட்களுக்கு முன்பு எழுத்துமூல அறிவிப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இந்த விவகாரத்தில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் நீதித்துறை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை வழங்கினார்களா என்பது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் அமெரிக்க மத்திய வழக்கறிஞர் ஜெஸ்ஸி லியுவை சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்க நீதிபதி திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து இருதரப்பினரும் தமது எழுத்துமூல கருத்துகளை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஈஸ்ட் பொட்டோமாக் பூங்கா மற்றும் கோல்ஃப் மைதானத்தை நவம்பர் 15ஆம் திகதி முதல் சுமார் 15 மாதங்களுக்கு மூடி மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுக்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

எனினும், பூங்காவை முழுமையாக மூடுவதற்கு எதிராக சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரியப் பாதுகாப்பு அமைப்புகள் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளன.

பூங்காவை மூடுவதற்கு பாதுகாப்புக் காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், புதிய கோல்ஃப் மைதானத் திட்டத்தை முன்னெடுப்பதே உண்மையான நோக்கம் என எதிர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்தக் கோரிக்கை தொடர்பான விசாரணையை நவம்பர் 13 ஆம் திகதி நடத்துவதற்கு நீதிபதி அனா ரெயஸ் தீர்மானித்துள்ளார்.

இதனிடையே, நீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்கு டிரம்ப் நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மறுபுறம், பூங்காவின் இயற்கைச் சூழல் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காகவே நீதிமன்றத்தை நாடியுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைகள் ஈஸ்ட் பொட்டோமாக் பூங்காவின் எதிர்காலம் மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் கோல்ஃப் மைதானத் திட்டம் தொடர்பான முக்கிய முடிவுகளைத் தீர்மானிக்கக்கூடும்.