புத்தகக் கொள்முதல் முறைகேடு விவகாரத்தின் எதிரொலியாக, கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் 1,800 நூல்கள் அகற்றப்பட்டன.
காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் பெயர்களில் போலியான நூல்கள், அதிக விலைக்கு கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்கள் தொடர்பாக தமிழக அரசு விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், முறைகேடு புகாருக்குள்ளான மேற்கண்ட பதிப்பகங்களின் புத்தகங்கள், பெரியார் அறிவுலகத்தில் இருந்து ஒன்று அகற்றப்பட்டன. அதாவது, அறிவுலகத்தின் 4-வது தளத்தில் உள்ள தமிழ் நூல்கள் பிரிவிலும், 5 மற்றும் 6-வது தளங்களில் ஆங்கில நூல்கள் பிரிவிலும் மேற்கண்ட பதிப்பகங்களின் ஏறத்தாழ 1,800 நூல்கள் வாசகர்கள் படிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தன.
முறைகேடுகள், போலி நூல்கள் விவகாரத்தை தொடர்ந்து மேற்கண்ட 1,800 புத்தகங்களும், அங்குள்ள ரேக்கில் இருந்து அகற்றப்பட்டன. தொடர்ந்து அவற்றை பெட்டியில் வைத்து வாசகர்கள் படிக்க முடியாதபடி மூடி வைத்தனர்.
அரசின் அடுத்தகட்ட உத்தரவுக்கு பிறகு அந்நூல்கள் சென்னையில் உள்ள நூலகத் துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் அல்லது இங்கேயே விசாரணைக்காக பத்திரப்படுத்தி வைக்கப்படும் என அறிவுலக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கோவையில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கு போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அதன்மூலம் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பெரியார் அறிவுலகத்துக்கு நூல்களை பரிந்துரை செய்வதற்கும், அதனைத் தேர்வு செய்து வாங்குவதற்கும் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தவறான தகவல்களுடன் அந்த புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனிடையே, போலி புத்தகங்கள் திமுக ஆட்சியில் வாங்கப்பட்டதாக தவெக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
திமுக தரப்பில், முந்தைய ஆட்சி மீது குற்றம் சுமத்துவதற்கு முன், தற்போதைய அரசு தனது நிர்வாகக் காலத்தில் நடந்த ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கணக்குக் காட்ட வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் விசாரணைக்கு திமுக தயார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், “பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கான புத்தகக் கொள்முதலில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஏஐ மூலம் திமுக ஊழல் செய்துள்ளது. பெரியார் பெயரில் இவ்வளவு பெரிய அநியாயம் செய்துவிட்டு, எங்கள் மீது திமுக அவதூறு பரப்புகிறது. தவெக ஆட்சியில் ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.