சகலரும் சகல உரிமைகளோடும் வாழ வழி பிறக்க வேண்டும் இனப்பிரச்சினையை தீர்ப்போம் என்கிறார்கள் முயற்சிகளை காணவில்லை நல்ல எண்ணங்கள் பிறக்க புதிய ஆண்டில் உறுதியுடன் பயணிப்போம் என செஞ்சொற்செல்வர். கலாநிதி ஆறு திருமுருகனின் புத்தாண்டுச் செய்தி தெரிவித்தார்.புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
உலகெங்கும் வாழும் அன்புக்குரிய அன்பர்களே உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக. விடைபெறும் ஆண்டாகிய 2025 எமக்குத் தந்த நல்ல அனுபவங்கள் பல உண்டு அவற்றை மனத்தில் இருத்தி விடை கொடுப்போம். புதிய ஆண்டில் புதிய எண்ணங்களோடு எமது வாழ்வைத் தொடர திடசங்கற்பம் புகுவோம். எல்லாத் தெய்வங்களும் இயற்கைத் தெய்வங்களே. இயற்கையை நன்றியோடு போற்றி வணங்குவோம். உலகம் முழுவதும் இன்று இயற்கை பற்றிய அச்சுறுத்தல் உண்டு. இயற்கையை யார் வெல்ல முடியும். எனவே பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு அனைத்தும் எமக்குச் சாதகமாக அமைய வேண்டும் என அனைவரும் வேண்டுதல் செய்வோம். எவ்வளவு தூரம் விஞ்ஞானம் வளர்ந்தாலும் இயற்கையை கட்டுப்படுத்த முடியாது. இவ் உண்மையை அனைவரும் உணர்வோம்.
மனித வாழ்வு எமக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பம் இவ் அரிய வாழ்வை நாம் நல்ல வண்ணம் அனுபவிக்க வேண்டும். போட்டியும், பொறாமையும், வஞ்சகமும், அறியாமையும் எம் சமூகத்திடையே பல பிளவுகளை உண்டாக்கிக் கொண்டே உள்ளது. அதனால் பகை உணர்வு பெருகிக் கொண்டே உள்ளது. குறிப்பாக பல இன்னுயிர்களை இழந்த எம்மண்ணில் இன்றும் அச்ச உணர்வு வளர்கிறது. ஒத்த வயதுடையவர்கள் ஒருவரை ஒருவர் ஓங்கி வாளால் வெட்டுகிறார்கள். சிலர் துடிக்கின்ற காட்சியை ரசிக்கிறார்கள். கைப்பேசி மூலம் இக்காட்சிகளை உலகுக்கு காண்பிக்கிறார்கள். இவை எல்லாம் தர்மத்திற்கு ஆகாது யாரும் பகையை வளர்க்காதீர்கள் அன்பைப் பெருக்குங்கள். பிறரின் உயிரை எடுக்கும் அளவிற்குத் துணியாதீர்கள். பகுத்தறிவுள்ள மனிதர்களாகிய நாம் பண்பட்டு வாழ வேண்டும் மன்னிக்கப் பழக வேண்டும். நாமும் நன்றே வாழ்ந்து பிறரையும் நல்ல முறையில் வாழ வைக்க வேண்டும். கல்வி வளர்ந்த வேகத்திற்கு கருணை வளரவில்லை அது கவலைக்குரிய விடயம்.
ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும் உலகில் அகதிகளாக அலையும் மக்களுக்கு விடிவு கிடைக்குமா? என எண்ணுகின்றோம். போரினால் வந்த அகதிகள் ஒரு பக்கம் இயற்கை இடரினால் வந்த அகதிகள் இன்னொரு பக்கம் எங்கள் மண் இரண்டு வகைத் துன்பத்தையும் சந்தித்துக் கொண்டேயிருக்கிறது. எமது நாட்டில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதய சுத்தியோடு செயற்படுபவர்கள் எம்மிடையே இல்லை. ஆட்சிக்கு வருபவர்கள் எல்லாம் 'திர்ப்போம் தீர்ப்போம்' என்பார்கள் தீர்ப்பதாக இல்லை. அநியாயமாக காலம் கடக்கிறது. போன நாட்கள் திரும்பி வராது. சகலரும் சகல உரிமைகளோடும் வாழ் வழி பிறக்க வேண்டும். அந்நாள் எந்நாளோ? யாம் அறியோம். இனிய புத்தாண்டு நாளில் நல்லவற்றை எண்ணிப் பிரார்த்தனை செய்வோம். அழகான உலகத்தை அன்போடு ரசித்து மகிழ்வோடு வாழ அனைவரும் முயல்வோம் என்றுள்ளது.
சகலரும் சகல உரிமைகளோடும் வாழ வழி பிறக்க வேண்டும்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space