2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகள், அரச வருமானம் மற்றும் செலவினங்களை முகாமைத்துவம் செய்தல், முன்னுரிமை அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துரையாடி அனுமதிக்கப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துகொண்ட நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் இவ்விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது 2027ஆம் ஆண்டிற்காக மதிப்பிடப்பட்டுள்ள அரச செலவினங்கள், மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி, அரச வருமான இலக்குகள் மற்றும் கடன் சேவைக்கான செலவுகள் தொடர்பில் இங்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளைத் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் பேரினப் பொருளாதார முன்னறிவிப்புகள் மற்றும் அரச நிதி முகாமைத்துவம் தொடர்பான சட்டக் கட்டமைப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் 2027ஆம் ஆண்டிற்காக மதிப்பிடப்பட்டுள்ள மொத்த மூலதனச் செலவினங்களில், வீதி அபிவிருத்தி, சுகாதார மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்துதல், மின்சாரக் கட்டமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் நகர அபிவிருத்தி உள்ளிட்ட உட்கட்டமைப்புத் திட்டங்களும் உள்ளடங்குகின்றன. இத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு நிதி வசதிகளை வழங்குதல், கடன் உத்தரவாதத் திட்டங்கள் மற்றும் வணிகத் துறைக்கு ஆதரவளித்தல் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. அரச சேவையின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் அரச சேவைகளின் தேவைகளுக்காக மேற்கொள்ளப்படும் செலவினங்கள் குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், 2027ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதற்கான தேவைகள், எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு நிதி வசதிகள் மற்றும் அரச கடன் முகாமைத்துவம் தொடர்பிலும் அமைச்சின் அதிகாரிகள் விளக்கமளித்தனர். அரச வருமான இலக்குகளை அடைதல், வரி நிர்வாகத்தின் வினைத்திறனை மேம்படுத்துதல் மற்றும் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை முறையாகப் பயன்படுத்துதல் தொடர்பான விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.