இதுகுறித்து ஷேக் ஹசீனா தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு அநீதியானது. இது சட்டவிரோதமான, அரசியலமைப்புக்கு எதிரான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கையாகும்.
எங்களுடைய அவாமி லீக் கட்சியைத் தலைவர் அற்றதாக மாற்றுவதற்காக, அரசியல் பழிவாங்கலின் கருவியாக நீதித்துறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற முயற்சிகள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன. அவை அப்போதும் தோல்வியடைந்தன, இப்போதும் தோல்வியடையும்.
எனக்கு மரண பயம் கிடையாது. 1975-ல் எனது பெற்றோர், சகோதரர்கள் என ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்தேன். கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கூட, கையெறி குண்டு தாக்குதல் மூலம் என்னைக் கொல்ல முயற்சி நடந்தது. எனக்கு எதிராகப் பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், அத்தனை சதிவலைகளையும் உடைத்து நான் வங்கதேச மக்களின் பக்கம் நின்றேன்.
மக்களின் வாக்குகள் மூலம் 5 முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்தேன். எனது ஒட்டுமொத்த வாழ்க்கையும் வங்கதேச மக்களோடும், அவாமி லீக் கட்சியோடும், ஜனநாயகப் போராட்டத்தோடும் பிணைந்துள்ளது. எனவே, நான் தெளிவாகக் கூறுகிறேன்: அனைத்து தடைகளையும் சதிகளையும் முறியடித்து, இந்த ஆண்டே நான் என் தாய்நாட்டுக்குத் திரும்புவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.