சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்ட பின்னர்,அடுத்த பாராளுமன்ற அமர்வில் அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவதற்கு யோசனையை முன்வைப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
பாராளுமன்ற அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (06) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியதை தொடர்ந்து சபாநாயகர் அறிவித்தலின் போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா,
2026 ஆகஸ்ட் 20ஆம் திகதி சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்தேன். இதுவரையில் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சபாநாயகருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது.
பாராளுமன்ற சிறப்புரிமை சட்டத்தில் சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினராகவே கருதப்படுகின்றார். அவருக்கென விசேட சிறப்புரிமை கிடையாது. ஜனாதிபதிக்கு மட்டுமே அவ்வாறான சிறப்புரிமை உள்ளது. எவ்வாறாயினும் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்வைக்கவுள்ளோம். அந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் மேலும் சில விடயங்களையும் உள்ளடக்கி அதனை கொண்டு வருவோம் என்றார்.
இதனை தொடர்ந்து எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க,நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்ட பின்னர் அடுத்த பாராளுமன்ற அமர்வில் அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு ஆளும் தரப்பின் சார்பில் யோசனையை முன்வைக்கின்றோம் என்றார்.