சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவுள்ள நிலையில்  பதவி விலக சபாநாயகர் தயாராகவுள்ளதாக அறிய முடிகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபை ஒழுங்குப் பத்திரத்தில் இருந்து நீக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட சிறப்புரிமை பிரச்சினைகளை எழுப்ப அனுமதி வழங்கப்படாமை தொடர்பில் எழுந்த சர்ச்சையின் போது, ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

 சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையே இந்தப் பிரச்சினைக்கு காரணமாகும். அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக 17 குற்றச்சாட்டுகள், 20 இலஞ்ச குற்றச்சாட்டுகள், பக்கச்சார்பு தொடர்பான 13 குற்றச்சாட்டுகள் அடங்கலாக 50 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறான பாரதூரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதனை இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல், முறைகேடாக செயற்பட்டுள்ளனர்.

பிரதி சபாநாயகர் சபைக்கு தலைமை தாங்குவதற்கான  காரணம் சபாநாயகர் பதவி விலகியதாலா? சபாநாயகர் இந்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்கின்றாரா? அவர் பதவி விலகுவாரா? சபாநாயகர் பதவி விலகவுள்ளதாக எங்களுக்கு அறியக் கிடைத்துள்ளது.

அவர் பதவி விலகினால் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்வோம். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிக்க,பதிலளிக்க, விசாரணைக்கு முகம்கொடுக்க சபாநாயகருக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும் என்றார்.