சமூக ஊடகங்களில் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிடும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்ட பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களுக்கு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்,
முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக வருமானம் ஈட்டும் வழிமுறை அதிகரித்துள்ள நிலையில், பெற்றோரின் அனுமதியுடனோ அல்லது அனுமதியின்றியோ குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றும் செயற்பாடு வேகமாக அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்துதல் அல்லது அவர்களின் அன்றாட செயற்பாடுகளை பகிர்தல் என்ற பெயரில், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இவ்வாறான காணொளிகளை வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றனர்.
மேலும், காணொளிகள் மற்றும் வலைப்பதிவுகள் ஊடாக குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை தொடர்பான தகவல்கள் மூன்றாம் தரப்பினருக்கு தெரியவருவதால், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். அத்துடன், இணையத்தில் பதிவேற்றப்படும் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஆபாசமான போலிப் படங்கள் மற்றும் காணொளிகள் உருவாக்கப்படும் அபாயமும் காணப்படுகின்றது.
எனவே, குழந்தைகளை இவ்வாறான ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் பொறுப்புடன் செயற்படுமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.