உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட ஐந்தாவது நாடான பாகிஸ்தானில், சுயாதீனமான மற்றும் நடுநிலையான ஊடகச் செயல்பாடுகளை முற்றிலும் முடக்கும் வகையில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை அந்நாட்டு அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிராந்தியத்தில் வெடித்துள்ள மக்கள் போராட்டங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான செய்திகளை மறைப்பதற்காகவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகளும் உள்ளூர் ஊடகவியலாளர்களும் கடும் கவலை தெரிவித்துள்ளனர்.
புதிய விதிமுறைகளின்படி, சர்வதேச ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் பாகிஸ்தானிய மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அனைவரும் நாட்டின் பிரதான மூன்று நகரங்களான இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் லாகூர் ஆகியவற்றைத் தாண்டி வேறு எந்தப் பகுதிக்கும் சென்று செய்தி சேகரிக்க வேண்டுமாயின், மத்திய தகவல் அமைச்சகத்திடம் முன்அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிராந்தியத்தில் அதிக அரசியல் உரிமைகளைக் கோரி கடந்த ஜூன் மாதம் முதல் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே, அங்கு நடைபெற்று வரும் தேர்தல் சூழல்கள் மற்றும் போராட்டங்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் வெளியாவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வரும் ஊடகவியலாளர்கள் தீவிர கெடுபிடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 1ஆம் திகதி, பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் சுயாதீனமாகப் பணியாற்றி வந்த இரு பாகிஸ்தானிய ஊடகவியலாளர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, இரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட 'ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு' சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், போலி செய்திகளைப் பரப்புவதாகக் கூறி, போலித் தகவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்றச் அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தலை அறிக்கையிட்ட சர்வதேச ஊடகமான 'அல் ஜசீரா'வின் செய்தியாளரைக் பகிரங்கமாக விமர்சித்த பாகிஸ்தான் அரசாங்கம், வெளிநாட்டு ஊடகங்களில் பணிபுரியும் அனைத்து ஊடகவியலாளர்களையும் அப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
'ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்' மனித உரிமை அமைப்புகள் கொந்தளிப்பு
பாகிஸ்தானின் முன்னணி மனித உரிமைகள் ஆணைக்குழு இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில், 'நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து செய்தி சேகரிக்க அரசாங்கத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையானது, விமர்சன ரீதியிலான மற்றும் நடுநிலையான ஊடகச் செயல்பாடுகளை அரசாங்கம் விரும்பவில்லை என்பதையே உணர்த்துகிறது' எனத் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் பெட்ரிசியா கோஸ்மேன் கருத்துத் தெரிவிக்கையில், 'பாகிஸ்தானில் சுருங்கி வரும் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடகச் சுதந்திரத்தின் அபாயகரமான போக்கையே இந்த புதிய கட்டுப்பாடுகள் காட்டுகின்றன' எனக் குறிப்பிட்டுள்ளார். எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் உலக ஊடகச் சுதந்திரச் சுட்டெண்ணில் பாகிஸ்தான் 180 நாடுகளில் 153வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ஊடகவியலாளர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space