சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்குப் பயந்து கொண்டே தற்போதைய அரசாங்கம் மெதுவாக முன்னோக்கி நகர்கிறது. அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எதிர்க்கட்சியினருடன் இணைந்து அதிகாரத்தைக் கைப்பற்றப் போவதாகக் குறிப்பிட்ட அந்த நபர் யார் என்பது எனக்கு தெரியாது. அது குறித்து எனக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் அமைந்துள்ள தொல்பொருள் திணைக்கள தலைமை அலுவலக வளாகத்தில் புதன்கிழமை (01) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கமானது எரிபொருள் விலைகளை அதிகரிக்கும் போது 200-500 ரூபாய் என்ற பாரிய தொகைகளில் அதிகரித்து விட்டு, தற்போது டீசல் விலையை வெறும் 20 ரூபாயால் மாத்திரம் குறைத்து மக்களுக்குப் பேரிடியைக் கொடுத்துள்ளது.
அரசாங்க ஊழியர்களுக்கு 20 கிலோகிராம் அரிசியைக் கொடுப்பனவு முறையின் கீழ் வழங்கும் இந்த அரசாங்கம், எனது அப்பாவி முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கும் ஏனைய வாகனங்களுக்கும் வெறும் 20 ரூபாய் என்ற சொற்ப தொகையையே குறைத்திருக்கின்றது.
இது மிகவும் வெட்கக்கேடான ஒரு விடயமாகும். சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு சற்றேனும் வெட்கம் இல்லையா என்று கேட்க விரும்புகிறேன்.
நாங்கள் எரிபொருள் விலையை 100 அல்லது 200 ரூபாயால் குறைப்போம் என்று இவர்களால் தைரியமாகக் கூற முடியாது. ஏனெனில் இவர்களுக்குப் பயம் இருக்கின்றது.
அடுத்ததாக எரிபொருள் விலையை நிச்சயமாக 700, 730 அல்லது 850 ரூபாய் வரை உயர்த்துவதே இவர்களின் மறைமுகத் திட்டமாகும். இந்த அரசாங்கத்துக்கு மக்களை வாழ வைப்பதில் எவ்வித அக்கறையும் இல்லை. மாறாக மக்களின் இரத்தத்தையும் சதையையும் எந்தளவுக்கு உறிஞ்சிக் குடிக்க முடியுமோ அந்தளவுக்கு உறிஞ்சிக் குடிப்பதையே இவர்கள் செய்கிறார்கள்.
அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எதிர்க்கட்சியினருடன் இணைந்து அதிகாரத்தைக் கைப்பற்றப் போவதாக யாரோ ஒருவரைக் குறிப்பிட்டு கூறுவதை நான் அவதானித்தேன்.
எதிர்க்கட்சியில் இருக்கும் அந்த நபர் யார் என்று எங்களுக்குத் தெரியாது. அதுமட்டுமன்றி எமக்கு இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அழைப்பும் விடுக்கப்படவில்லை.
தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நிவாரணம் போதுமானதா என்று பார்த்தால், அது மிகவும் குறைவானதாகும். 20 ரூபாய் குறைப்பு என்பது முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கும், இந்த நாட்டில் முச்சக்கரவண்டிகளை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கும், வாகன சேவை வழங்குநர்களுக்கும், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கும், படகு ஓட்டுநர்களுக்கும் அரசாங்கம் செய்யும் கேலிக்கூத்தாகும்.
ஜனாதிபதியும் நிதி அமைச்சருமானவர் ஏன் தன்னிச்சையாக எரிபொருள் விலையைக் கணிசமான தொகையால் குறைப்பதாக ஒரு உறுதியான முடிவை எடுக்க முடியவில்லை என்று கேட்கிறேன்.
சர்வதேச நாணய நிதியத்துக்குப் பயந்து கொண்டே இந்த அரசாங்கம் தனது பயணத்தை மெதுவாகத் தொடர்கின்றது. மக்களுக்கு இந்த அரசாங்கத்தால் உண்மையான எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை. கடந்தகால அரசாங்கங்கள் ஓரளவேனும் மக்களைப் பற்றிச் சிந்தித்தன. ஆனால் தற்போதைய அரசாங்கம் மக்களிடம் இருந்து வரிகளை மாத்திரமே உறிஞ்சிக் குடிக்கின்றது என்றார்.
சர்வதேச நாணய நிதியத்துக்கு பயந்து அரசாங்கம் மெதுவாகச் செல்கிறது தயாசிறி குறிப்பிட்ட எதிர்க்கட்சியினர் யாரென்று எனக்கு தெரியாது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space