கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் 7 பேரால் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கோரியும்  சம்பந்தப்பட்டவர்களை  கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு  சிறிலங்கா காவல் துறை  இடையூறு விளைவித்ததன் நோக்கம் என்ன, இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்வதில் சிறிலங்கா காவல் துறை அசமந்தமாகவே செயற்படுகிறார்கள் என இலங்கை  தமிழரசுக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை  (20) இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்  ஏழாம் நாள்  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

கிளிநொச்சி மாவட்டம் சாந்தபுரம் கிராமத்தில் பெண் ஒருவர் 16 முதல் 23 வயதுக்குட்பட்ட  7 இளைஞர்களால் கூட்டுப்பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.அந்த பெண் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரமல்ல முழு நாட்டிலும்  அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. புங்குடுதீவு வித்தியா  கூட்டுப்பாலியல் படுகொலை சம்பவத்துக்கு பின்னர் தற்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாந்தபுரம் மக்கள் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நியாயம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட போது  சிறிலங்கா காவல் துறை அதற்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார்கள்.

நியாயத்தை கோரிய போராட்டத்தை  சிறிலங்கா காவல் துறை தடுக்கும் நோக்கம் என்ன ? கூட்டு பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட 7 பேரையும் கைது செய்ய வேண்டும். அவர்களுக்காக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாக கூடாது என்பதை வலியுறுத்தி  சாந்தபுரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சாந்தபுரம் மக்களை குடியேற்றம்  செய்ய இராணுவத்தினரும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷவும் மறுத்தார்கள். சாந்தபுரம் மக்கள் விவசாயத்தை முன்னிலைப்படுத்தி வாழ்ந்து வருகிறார்கள். இந்த மக்களை குடியேற்றம் செய்ய அப்போதைய அரசாங்கம் மறுப்பு தெரிவித்தது.இருப்பினும் அந்த மக்கள் உறுதியாக இருந்தார்கள்.

கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் இயங்கிய தினக்குரல் பத்திரிகையின் செயற்பாடுகளும் இந்த மக்களை மீள் குடியேற்றம் செய்வதற்கு  பெரிதும் பங்களிப்புச் செய்தது.

யாழ் தினக்குரல் பத்திரிகையின் தற்போதைய ஆசிரியர் வினோஜித்  முன்பு அந்த பத்திரிகையின் முழு நேர ஊடகவியலாளராக இருந்த போது சாந்தபுரம் மக்கள் தற்காலிகமாக வாழ்ந்த இடத்துக்குச் சென்று அவர்களின் அவல நிலைமையை வெளியிட்டு உண்மையை உலகுக்கு எடுத்துரைத்தார். இதன் பின்னரே அந்த மக்கள் சாந்தபுரம் பகுதியில் குடியமர்த்தப்பட்டார்கள். இதன் வெறுப்பு இன்றும்  சிறிலங்கா காவல் துறை, பாதுகாப்பு தரப்பு, புலனாய்வு பிரிவுக்கு  மத்தியில் உள்ளது.

சாந்தபுரம் மக்கள் போருடனும், போர் வடுக்களுடனும் வாழ்ந்தவர்கள். இன்றும் இந்த மக்கள் திட்டமிட்ட போதைப்பொருள் பாவனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். சாந்தபுரம் கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயங்குகிறது. சிறிலங்கா காவல் துறையினர் அசமந்தகரமாக செயற்படுகிறார்கள் என்றார்.