ஆலிஸ் ஹுவாங் என்ற பெண் உடன் ரகசிய உறவு கொண்டதை ‘என்விடியா’ நிறுவன சிஇஓ ஜென்சென் ஹுவாங் ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக என்விடியா நிறுவனம் விசாரிக்க உள்ளது. இந்த விவகாரம் இப்போது பேசுபொருளாகி உள்ளது. ஏனெனில், இதன் பின்னணியில் சீனா உளவு பார்த்ததா என்று கேள்வி எழுந்துள்ளது.

தொழில்நுட்ப துறையில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் சூழலில் ஏஐ நுட்பம் சார்ந்த செமி கண்டக்டர் சிப் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் என்விடியா நிறுவனம், உலக அளவில் உயர் மதிப்புமிக்க (சந்தை மதிப்பில்) முன்னணி நிறுவனமாக உள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனமான என்விடியா, ஆட்டோமேட்டிவ் மற்றும் மொபைல் கம்யூட்டிங் சார்ந்து சிப் உருவாக்கி வரும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. இப்போது உலக அளவில் இந்த நிறுவன சிப்-களுக்கு தான் டிமாண்ட் அதிகம்.

இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர், தலைவர் மற்றும் சிஇஓ பொறுப்பில் இருப்பவர் ஜென்சென் ஹுவாங். 63 வயதான அவர், தைவானை சேர்ந்தவர். ஒரேகான் மாகாண பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் பிரிவில் இன்ஜினீயரிங் பட்டமும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றவர். கடந்த 1993-ல் என்விடியா நிறுவனம் நிறுவப்பட்டது.

இந்நிலையில், ஒரு பெண்ணுடன் தனக்கு இருந்த ரகசிய உறவை ஜென்சென் ஹுவாங் இப்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்காக தனது மனைவி லோரி ஹுவாங் மற்றும் குழந்தைகளிடமும் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். ‘எனது செயல் என் மனைவி மற்றும் குழந்தைகளை புண்படுத்தி இருக்கும். இதற்காக மிகவும் வருந்துகிறேன்’ என்று ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ஜென்சென் ஹுவாங் தெரிவித்துள்ளார்.

‘நான் எனது பொறுப்புகளில் இருந்து தவறியுள்ளேன். உங்களுக்காக செயல்படுவதுதான் எனது பணி. நிச்சயம் உங்கள் நம்பிக்கையை பெறுகின்ற வகையில் எனது பணி இருக்கும். இந்த விவகாரம் தொடர்பாக வெளிப்படையான விசாரணையை நிறுவனம் மேற்கொள்ளும்’ என்றும் அதில் அவர் கூறியுள்ளார்.

குற்றச்சாட்டு என்ன?

கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனம் ஆலிஸ் ஹுவாங் என்ற பெண் குறித்த செய்தியை வெளியிட்டது. அதில் அவருக்கும் ஜென்சென் ஹுவாங்குக்கும் இடையிலான உறவு குறித்த தகவல் வெளியானது. இதனை அமெரிக்க அதிகாரிகள் கண்டறிந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட மெகாஸ்பீடு என்ற நிறுவனத்துடன் ஆலிஸ் ஹுவாங் இணைந்து செயல்படுவதாக தகவல். கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 4.8 மில்லியன் மதிப்பிலான சிப்களை என்விடியா நிறுவனத்திடம் இருந்து அந்த நிறுவனம் பெற்றுள்ளது. அது யாருக்கு சென்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. சீன ஏற்றுமதியில் சில தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அதனால் இது இப்போது கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக, மெகாஸ்பீடு நிறுவனம் சிப்களை சீனாவுக்கு கொண்டு செல்லவில்லை. சிப் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ததாகவும் என்விடியா தெரிவித்திருந்தது. இருப்பினும் இதில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அடங்கி உள்ள காரணத்தால் உரிய விசாரணை வேண்டும் என அரசியல் வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இதற்கிடையே என்விடியா சிஇஓ-வை உளவு பார்த்த குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

“அவர் (ஜென்சென் ஹுவாங்) நல்ல மனிதர் என்பதை நான் அறிவேன். ஆனால், என்ன நடக்கிறது என்று நம்மால் சொல்ல முடியாது. நமது தேசத்துக்கு அவர் அற்புதமான பணியை செய்துள்ளார்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டே ஜென்சென் ஹுவாங்கின் செயல் குறித்து ட்ரம்ப் வசம் தெரிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.