பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான 'சிசுசெரிய' பாடசாலைப் பேருந்துச் சேவையானது புதன்கிழமை (01.07.2026) காலை யாழ். கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினரும், சாவகச்சேரிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான க.இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு சேவையை ஆரம்பித்து வைத்தனர்.பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்து வசதிக்கான பிரத்தியேகச் சேவையான சிசுசெரிய பேருந்துச் சேவை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இத் திட்டத்தின் கீழ் மாணவர்களிடமிருந்து அரைவாசிப் பயணக் கட்டணம் மாத்திரமே அறவிடப்படுவதுடன் எஞ்சிய தொகை அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்படுகின்றது. தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் உசனிலிருந்து இரண்டு தனியார் பேருந்துகள் இச்சேவையில் இணைக்கப்பட்டுள்ளன. உசனிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேருந்துச் சேவையும், உசனிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் பேருந்துச் சேவையுமே ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இப் புதிய சேவையின் சிறப்பம்சமாக மாணவர்களின் விபரங்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் கைத்தொலைபேசி இலக்கங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு மாணவர்களுக்குப் பிரத்தியேக 'டிஜிட்டல் அட்டை' ஒன்று வழங்கப்படும். மாணவர் பேருந்தில் ஏறி குறித்த டிஜிட்டல் அட்டையைத் தொடுதிரையில் காண்பித்தவுடனேயே அவர் பேருந்தில் ஏறிய நேரம் உள்ளிட்ட விபரங்கள் பெற்றோரின் தொலைபேசிக்கு உடனடியாகக் குறுஞ்செய்தியாகச் சென்றடையும்.
அதேபோன்று மாணவர் பேருந்திலிருந்து இறங்கும் போதும் தொடுதிரையில் அட்டையைக் காண்பித்ததும் பாதுகாப்பாக இறங்கிய நேரத் தகவல் பெற்றோரின் தொலைபேசிக்குச் செல்லும். இதன்மூலம் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு முற்றுமுழுதாக உறுதிப்படுத்தப்படுகின்றது. மிகவும் முன்மாதிரியான இந்த டிஜிட்டல் செயற்றிட்டத்தை தனியார் பேருந்தின் உரிமையாளரே தனது சொந்தச் செலவில் நடைமுறைப்படுத்தியுள்ளமை விசேட அம்சமாகும்.
'சிசுசெரிய' பாடசாலைப் பேருந்துச் சேவை கொடிகாமத்தில் ஆரம்பித்து வைப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space