திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'பொடி லெசி' என்றழைக்கப்படும் அருமாஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வா சிறிலங்காவிற்கு  அழைத்து வரப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து விசேட பொலிஸ் குழுவினரால் இன்று வெள்ளிக்கிழமை (27) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச பொலிஸாரின் தலையீட்டின் மூலம் இந்திய பாதுகாப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டார். 2024ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி பிணையில் விடுதலையானதன் பின்னர், கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற பொடி லெசி, 2025 ஜனவரி மாதம் மும்பையில் வைத்து, பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன்படி, இன்றையதினம் அதிகாலை 05.55 மணியளவில் மும்பையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-142 விமானம் மூலம் அவர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் பலத்த பாதுகாப்புடன் எல்பிட்டிய பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.