போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுச் சிறைச்சாலையில்  தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் உயிரிழந்த இஷார ஹர்ஷ குமார என்பவரின் உறவினர்கள்  சிறிலங்கா காவல் துறை  தலைமையகத்தில் முறைப்பாடொன்றை அளித்துள்ளனர்.

தனது கணவரின் மரணத்திற்குப் பொறுப்புக் கூற வேண்டிய  சிறிலங்கா காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி நீதியை நிலைநாட்டுமாறு கோரியே இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்ததாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த இச்சம்பவம் 25 ஆம் திகதி பதிவாகியிருந்தது.

கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இஷார ஹர்ஷ குமார என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு ஹோமாகம பொலிஸ் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளானதாக அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

பின்னர் உறவினர்களின் கோரிக்கைக்கு அமைவாக, அவரை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிப்பதற்குப் பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோதிலும், அங்கு அவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.