சிறிலங்கா ஜனாதிபதி விஜயத்தை முன்னிட்டு அவசர அவசரமாக வீதியை செப்பனிடும் அதிகாரிகள்
vidiyel 12 தை 2026 · 15:57 3 views
Ad Space
Ad Space
மன்னார் தபாலகத்தில் இருந்து செத்பார் செல்லும் பிரதான வீதி நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்படும் நிலையில், அவ்வீதியை புனரமைப்பு செய்ய பல தரப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (15) மன்னாருக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் குன்றும் குழியுமாக காணப்படும் குறித்த வீதியை செப்பனிடும் பணியில் உரிய திணைக்களத்தினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னார் பிரதான தபாலகத்தில் இருந்து சௌத்பார் புகையிரத பகுதிக்குச் செல்லும் குறித்த வீதி நீண்ட காலமாக சீரின்றி காணப்பட்டது.எனினும் அவ்வீதியில் முழுமையாக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க உரிய திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்விடயம் தொடர்பாக அவ்வீதிக்கு பொறுப்பான திணைக்களத்திடம் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து முறையிட்டு வந்தனர். எனினும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மழைக்காலங்களில் அவ்வீதியினூடாக மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மன்னார் நகரில் இது முக்கியமான பிரதான வீதியாக உள்ளபோதிலும் அதனை சீரமைக்க யாரும் அக்கறை கொள்ளவில்லை.
இந்த நிலையில் மன்னாரில் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள காற்றாலை மின் கோபுர திறப்பு விழா மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களுக்கு அடிக்கல் நடும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஜனாதிபதி வருகை தரவுள்ளார்.
வீதியை சீரமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத திணைக்களத்தினர் ஜனாதிபதியின் வருகையின் காரணமாகவே தற்போது அந்த வீதியை செப்பனிடும் பணியை ஆரம்பித்துள்ளமை நோக்கத்தக்க விடயமாகும்.