வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன தலைமையிலான 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு பாராளுமன்ற அதிகாரிகளைக் கொண்ட இலங்கைத் தூதுக் குழுவினர் சீனாவில் நடைபெறும் செயலமர்வில் பங்கேற்றுள்ளனர்.
சீனாவின் பீஜிங் மற்றும் குவங்டாங் மாகாணங்களில் மே 25ஆம் திகதி முதல் ஜூன் 5ஆம் திகதி வரை சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் சர்வதேச ஒத்துழைப்பு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைத் தூதுக் குழுவினர் சீனாவுக்கு சென்றுள்ளனர்.
இலங்கைத் தூதுக் குழுவின் தலைவர் என்ற ரீதியில் பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன ஆரம்ப நிகழ்வில் உரையாற்றினார்.
அத்துடன், பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதுரகத்தின் பிரதித் தூதுவர் பூர்னிமா குணசேகர மற்றும் சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் சர்வதேச ஒத்துழைப்பு மையத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் கியூ ஐஜூன் ஆகியோரும் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.
இலங்கைத் தூதுக் குழுவினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் தொடர்ச்சியான விரிவுரைகள், கலந்துரையாடல்கள், நிறுவனங்களுக்கான விஜயங்கள், ஆளுகை, பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு நவீனமயமாக்கல், தொழில்நுட்ப புத்தாக்கம், பசுமை அபிவிருத்தி மற்றும் சீனாவின் நிலைபேறான அபிவிருத்தி முயற்சிகள் போன்றவற்றை இலக்காகக் கொண்டு பீஜிங், சென்ஜென் மற்றும் குவங்டாங் மாகாணங்களுக்கான கள விஜயங்கள் உள்ளடங்கியுள்ளன.
இந்தச் செயலமர்வில் இலங்கையின் பங்கேற்பானது இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால பரஸ்பர உறவுகள், பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஈடுபாடுகள், நிறுவன ரீதியான ஒத்துழைப்புக்களுக்கான ஊக்குவிப்பு மற்றும் இலங்கை மற்றும் சீன மக்கள் குடியரசுக்கு இடையிலான அறிவுப் பகிர்வு என்பவற்றை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.
இலங்கைத் தூதுக் குழுவில் வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் ரி.பி.சரத், பாராளுமன்ற உறுப்பினர்களான சாமர சம்பத் தசாநாயக்க, ரோஹன பண்டார, டபிள்யூ.எச்.எம்.தர்மசேன, உபுல் கித்சிறி, தாஹிர் மரிக்கார், சந்தன தென்னக்கோன், தர்மப்பிரிய திசாநாயக்க, சுசந்த குமார நவரத்ன, நந்தன பத்மகுமார, ஸ்டீபனி பெர்னான்டோ, ஸ்ரீ பவானந்தராஜா, ஈ.எம்.பஸ்நாயக்க, மொஹமட் சரீப் பஸ்மின், பத்மநாதன் சத்தியலிங்கம், தினேஷ் ஹேமந்த பெரேரா, சமந்த ரணசிங்க, அப்துல் வாசித் மற்றும் ரொஷான் அக்மீமன ஆகியோர் உள்ளடக்கியுள்ளனர்.
அத்துடன், பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, நிதி பணிப்பாளர் கமகே சரத் குமார, சிரேஷ்ட பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் லால் குமாரசிறி மற்றும் பிரதான பாராளுமன்ற ஒழுங்குமரபு அதிகாரி அமா விதானகே ஆகிய அதிகாரிகளும் இக்குழுவில் இணைந்துள்ளனர்.
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சீனாவில் செயலமர்வு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space