சிறிலங்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டி நாளை வியாழக்கிழமை (26) கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற உள்ள நிலையில் பொலிஸாரினால் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதனை பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இந்தப் போட்டி இரவு 7.00 மணிக்கு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்ட நெரிசலை நிர்வகிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மைதானத்திலும் அதைச் சுற்றியும் விசேட போக்குவரத்து ஏற்பாடு செயல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, வாகன சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், போட்டியின் போது வழங்கப்படும் போக்குவரத்து அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் வீதிகள்:  போட்டி நடைபெறும் நேரங்களில் பின்வரும் வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்: வின்சென்ட் பெரேரா மாவத்தை (கிரேண்ட்பாஸ் வீதி), பிரிட்டோ பாபாபுள்ளே பாலப் பகுதிச் சந்தியிலிருந்து பாபாபுள்ளே நோக்கி நுழைதல். பாபாபுள்ளே பாலத்திற்கு அருகில் இருந்து விளையாட்டு மைதானம் நோக்கி நுழைதல். செபஸ்தியன் கால்வாய் வீதி, மெல்வத்தை பாலத்திற்கு அருகில் இருந்து மைதானம் நோக்கி நுழைதல். 100 அடி வீதி, பன்சல வீதிச் சந்தியிலிருந்து மைதானம் நோக்கி நுழைதல். மாளிகாவத்தை குறுக்கு வீதி மற்றும் விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள கிளை வீதிகள் ஊடாக மைதானத்திற்குள் நுழைதல். சதர்ம மாவத்தை பன்சல வீதி (பெந்தாராம வீதி) சந்தியிலிருந்து பன்சல வீதிக்குள் நுழைதல். வாகனத் தரிப்பிட வசதிகள்:  ஆர்.பிரேமதாச மைதானத்தைச் சுற்றியுள்ள வாகனத் தரிப்பிடங்களுக்கு மேலதிகமாக பின்வரும் இடங்களில் வாகனங்களை நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன: கிரேண்ட்பாஸ் மெக்ஸ்பார்க் வாகனத் தரிப்பிடம். சதொச வாகனத் தரிப்பிடம். செபஸ்தியன் கால்வாய் வாகனத் தரிப்பிடம். கோவில் வீதி, ஆப்பிள் வத்தை மற்றும் 100 அடி வீதியின் இருமருங்கிலும் வாகனங்களை நிறுத்த முடியும். ரசிகர்களின் பாதுகாப்பிற்காக சீருடை அணிந்த பொலிஸாரும், சிவில் உடையில் புலனாய்வுப் பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அத்துடன் மைதானத்திற்குள் நுழையும் போது பின்வரும் பொருட்கள் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது: பெரிய பைகள். கண்ணாடிப் போத்தல்கள். ட்ரோன் கருவிகள். சிறிய கத்திகள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள். போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள். மைதானத்திற்குள் நுழையும் போது சிசிடிவி அவதானிப்பு, உடல் பரிசோதனை மற்றும் வாகனச் சோதனை என்பன இடம்பெறும் என்பதால், பாதுகாப்புப் பிரிவினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.