சிறுபோகச் செய்கைக்கு உரத் தட்டுப்பாடு இல்லை: மேலதிக உரக் கப்பல் நாளை வருகை - நாமல் கருணாரத்ன
Ad Space
Ad Space
சிறுபோகச் செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில், உர விநியோகம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன விளக்கமளித்துள்ளார். தற்போது நிலவும் சர்வதேச யுத்தச் சூழலுக்கு மத்தியிலும், உரத் தேவையை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்ய அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நாட்டில் உரம் தேவைக்கும் அதிகமான அளவில் கையிருப்பில் உள்ளதாகத் தெரிவித்த அவர், யூரியா உர விநியோகத்தில் நிலவிய சிறிய அளவிலான சிக்கல்களும் தீர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நெற்செய்கைக்கு சுமார் 80,000 தொன் யூரியா உரம் தேவைப்படும் நிலையில், தற்போது ஒரு இலட்சம் தொன் யூரியா உரம் நாட்டிற்குள் உள்ளதாக அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், மேலதிக பயிர்ச்செய்கைகளையும் கருத்திற்கொண்டு நாளை 05ஆம் திகதி மேலும் 25,000 தொன் உரம் ஏற்றிய கப்பல் வரவுள்ளதோடு, எதிர்காலத்தில் மேலதிக உரக் கப்பல்களைக் கொண்டுவருவதற்கும் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Ad Space
Ad Space