கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட நன்கொடைத் தேவைகள் தொடர்பான ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ அடங்கிய குழுவினரால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டிலிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட பணம் மற்றும் மருந்துகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று சனிக்கிழமை (10) முறைப்பாடு சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆசியாவின் மிகப்பெரிய சிறுவர் வைத்தியசாலையான கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இணையத்தளத்தில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான நன்கொடைத் தேவைகள் தொடர்பான ஆவணங்கள் ஒக்டோபர் 5ஆம் திகதி வரை காணப்பட்டன. அன்றைய தினம் மாலை இந்த விடயத்தை ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய பின்னர் இணையத்தளம் முடக்கப்பட்டது. இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட நன்கொடைத் தேவைகள் தொடர்பான ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று சமர்ப்பித்துள்ளோம்.
சுகாதார அமைச்சர் மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் இந்த ஆவணங்கள் 2022ஆம் ஆண்டுக்குரியவை எனக் கூறுகின்றனர். ஆனால், என்னிடமுள்ள திரைப்பிடிப்புகளில் 2026 ஒக்டோபர் 5ஆம் திகதி உள்ளிட்ட திகதிகள் காணப்படுகின்றன. அடுத்த ஆண்டுக்கான மருந்துத் தேவைகள் தொடர்பான ஆவணமொன்றில் 2025 ஒக்டோபர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களில் 2022ஆம் ஆண்டைக் குறிப்பிடும் தகவல்கள் இல்லை. இதற்கான தொழில்நுட்ப ஆதாரங்களையும் ஆவணங்களையும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் வழங்கியுள்ளேன்.
ஆவணங்கள் பழையவை என்றால், அவற்றின் அடிப்படையில் 2022ஆம் ஆண்டு முதல் 2026 ஒக்டோபர் 6ஆம் திகதி வரை பெறப்பட்ட நன்கொடைகளுக்கு என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாகப் பட்டியல் மாற்றப்படாமல் இருந்திருந்தால், சம்பந்தப்பட்ட முன்னாள் வைத்தியசாலைப் பணிப்பாளர்கள் மற்றும் மருந்தக, மருத்துவப் பொருள் விநியோகப் பிரிவு அதிகாரிகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இணையத்தளத்தில் நன்கொடைகள் கிடைக்கும்போது தேவைகளின் பட்டியலும் அதற்கேற்ப மாற்றமடைந்ததாகத் தெரிகிறது. வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் பிரதி பணிப்பாளரின் பெயர்கள், புகைப்படங்கள், தொலைபேசி இலக்கங்கள் போன்றவற்றைப் புதுப்பிக்க முடியும் என்றால், நன்கொடைத் தேவைகள் தொடர்பான பட்டியலை ஏன் புதுப்பிக்க முடியவில்லை? இதன் பின்னணியில் தொழில்நுட்ப மற்றும் நிதி விசாரணைகள் அவசியம்.
நாட்டின் தேசிய வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு தொடர்பான பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்டோரும் சுகாதாரத் துறை சார்ந்தவர்களும் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துகளை முன்வைத்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கூடங்களில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் சுகாதார அமைச்சு உரிய பதிலை வழங்கவில்லை.
மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் நோயாளர்கள் வெளியில் மருந்துகளை வாங்க வேண்டிய நிலைமை குறித்தும் தகவல்கள் உள்ளன. நோயாளர்களுக்கு வெளியிலிருந்து மருந்துகள் மற்றும் ஊசிகளை வாங்குமாறு அறிவுறுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பான ஆவணங்களும் என்னிடம் உள்ளன. பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்கூட இத்தகைய செலவுகளைச் சுமக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் ஆதாரங்களுடன் சுமார் 20 முறைப்பாடுகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளேன். அவற்றில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 2,500 மில்லியன் ரூபா பெறுமதியான ஆய்வகப் பரிசோதனைப் பொருட்கள் தொடர்பில் மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைப்பாடும் அடங்குகிறது. இம்முறைப்பாடுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
நான் 2024ஆம் ஆண்டு சுகாதார அமைச்சுப் பணியிலிருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்டேன். தற்போது உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக உள்ளேன். எனவே, என்னை ஒழுக்காற்று விசாரணையில் இடைநிறுத்தப்பட்ட மருத்துவராகச் சித்தரிப்பது தவறானது. பொதுச் சேவையில் மீண்டும் இணைப்பது தொடர்பில் சட்ட நடைமுறைகள் அவசியம்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டின் உண்மையான மருந்துத் தட்டுப்பாட்டு நிலைமையை ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். தற்போதைய சுகாதார அமைச்சரால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாவிட்டால், நிபுணர் மருத்துவர் நிஹால் அபேசிங்க அல்லது பேராசிரியர் கிரிஷாந்த போன்ற துறைசார் நிபுணர்களை நியமிப்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவை இம்முறைப்பாடுகள் தொடர்பில் சாட்சிகளை அழைத்து விசாரிக்க வேண்டும். ஆவணங்களை ஆராய்ந்து ஆதாரங்களை உறுதிப்படுத்தி, குற்றங்கள் நிரூபிக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.