நாட்டின் சிறைகளில் அடைக்கப்படும் பௌத்த துறவிகள் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் தங்களுடைய காவி உடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் ஒப்புதலுடன், சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் (அத்தியாயம் 54) சிறைச்சாலை திணைக்களத்தின் நிலையியல் கட்டளைகளைத் திருத்தி, செவ்வாய்க்கிழமை (20) திகதியிடப்பட்ட இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, பௌத்த துறவி ஒருவர் சிறையில் அடைக்கப்படும்போது, சிறைச்சாலை சேர்க்கையின்போது அவருடைய காவி உடையை அகற்றுவது தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர், பௌத்த விவகாரத் திணைக்களத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பௌத்த விவகாரத் திணைக்களம் இது குறித்து உரிய நிகாயா (பிரிவு) அல்லது மகா சங்கத்திற்குத் தெரிவித்து, தனது தீர்மானத்தை 10 நாட்களுக்குள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்குத் தெரிவிக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்காலப்பகுதிக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாவிடின், சிறைச்சாலைகள் ஆணையாளர் உரிய விதிமுறைகளின்படி தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தங்கள், சிறையில் அடைக்கப்பட்ட பௌத்த துறவிகள் ஒரு கைதியாக சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும்போது தங்களுடைய காவி உடையை அணியவும் அனுமதி அளிக்கின்றன.
இருப்பினும், குறித்த துறவி காவி உடை அணிவதற்கு உரிய நிகாயா (பிரிவு) அனுமதி அளிக்கவில்லை எனில், சிறைச்சாலைகள் ஆணையாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சிறையில் அடைக்கப்பட்ட ஏழு வேலை நாட்களுக்குள் உரிய நிகாயாவிடமிருந்து தேவையான அனுமதியைப் பெறுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர், பௌத்த விவகாரத் திணைக்களத்தைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
தேவையான மாற்றங்களுடன், இந்த விதிமுறைகள் பிற மதங்களின் குருமார்களுக்கும் பொருந்தும் என அந்த வர்த்தமானியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட பௌத்த துறவிகளை நடத்தும் விதம் மற்றும் காவலில் இருக்கும் போது அவர்கள் மத உடைகளை அணிய அனுமதிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இந்த புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

