சிறைச்சாலை கட்டமைப்பில் நிலவும் மனிதாபிமானமற்ற சூழல் மற்றும் அங்கு தங்கு தடையின்றி அரங்கேறும் ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கு முறையான, பலமான சட்ட விசாரணைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய நுகர்வோர் முன்னணி காரியாலயத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2021 ஆம் ஆண்டில் நான் கைது செய்யப்பட்டு, போகம்பரை மற்றும் பல்லன்சேனை சிறைச்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டேன். சிறைச்சாலைக்குள் கைதிகள் எவ்வாறு அநாகரிகமான முறையில் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை முதன்முதலில் நாட்டுக்கு வெளிப்படுத்தியது நானே.
தொற்றுநோய் காலத்தில் எங்களை சிறைச்சாலை பேருந்தில் அழைத்துச் சென்றபோது, அதிகாரிகள் கைதிகளிடம் கைபேசி வழிப் பணப் பரிமாற்ற முறையில் பணம் கோரினர். கைதிகள் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் 100,000, 200,000 என அதிகாரிகளின் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பினர்.
போகம்பரை சிறைச்சாலையில் கழிவுகள் நிறைந்த ஒரு நரக சூழலிலேயே எங்களை வைத்திருந்தனர். எனக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும், தனிமைப்படுத்தல் என்ற பெயரில் என்னை மேலும் 3 நாட்கள் சிறையில் வைத்து 3 அதிகாரிகள் கொடூரமாகத் தாக்கினர். மனித உரிமைகள் ஆர்வலர் சேனக பெரேரா போன்றவர்களின் தலையீட்டாலேயே நான் அன்று காப்பாற்றப்பட்டேன். கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் மதிப்பு 50 ரூபாய் கூட இருக்காது.
அப்போதைய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த போன்றவர்கள் இந்த முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். அண்மையில் அங்குராங்கெல பகுதியிலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் பதவிகளில் இருக்கும் போதே சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்புகளையும், கழிப்பறை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு வழங்கப்படும் வழக்கு இலக்குகளை அடைவதற்காக, அவர்கள் அப்பாவி இளைஞர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைக்கின்றனர். இதற்குப் பிட்டிகல பொலிஸ் நிலைய சம்பவங்களே சாட்சி.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் அதிகாரிகள் உட்பட 26க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் கருப்புப் பட்டி அணிந்து ஆர்ப்பாட்டம் செய்வது வெறும் அரசியல் கண்துடைப்பாகும். நான் சிறையில் இருந்தபோது எனக்கு ஒரு முதற்தகவல் அறிக்கையைக் கூடப் பதிவு செய்ய உதவாத இவர்கள், இன்று நாடகமாடுகின்றனர்.
அதேபோல, சிறைக்குள் நடக்கும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு அதிகாரிகளே முழுப்பொறுப்பேற்க வேண்டும். அதை விடுத்து, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினரின் மீது மாத்திரம் வீண் பழி சுமத்துவதில் எந்தப் பயனும் இல்லை. அங்குராங்கெல சிறைச்சாலை மரணத்தையும் ராஜபக்ஷக்களின் கணக்கிலா எழுதப் போகிறீர்கள்? ஒரு நாய் கழிவறையில் வழுக்கி விழுந்தால்கூட ராஜபக்ஷக்களைத் தான் நினைவுகூர வேண்டுமா?
சிறைச்சாலை அதிகாரிகள் ஒழுங்காகத் தங்களது கடமைகளைச் செய்திருந்தால், சிறைக்குள் அலைபேசிகளோ அல்லது போதைப்பொருட்களோ சென்றிருக்காது. இந்த அத்தனை சட்டவிரோத மோசடிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளே பொறுப்பாளிகளாவர். எனவே, இந்த அநீதிகளுக்கு எதிராக முறையான மற்றும் நடுநிலையான விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றார்.
சிறைச்சாலைகளில் மனிதாபிமானமற்ற நிலையும் ஊழல்களும்: உடனடி சட்ட விசாரணை அவசியம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space