துப்பாக்கிச் சூடு காரணமாக உயிரிழந்த இலங்கையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபரான முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்னவின் பூதவுடலுக்கான இறுதிக்கிரியைகள், அரச மரியாதைகளுடன் திங்கட்கிழமை (20) பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.
மாலபே, தலாஹேன பராக்கிரம மாவத்தையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த 17 ஆம் திகதி காலை முன்னாள் பொலிஸ் மா அதிபர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு, முல்லேரியா கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார். அவர் தனது மெய்பாதுகாவலரின் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபரின் உடற்கூற்றுப் பரிசோதனையில் திறந்த தீர்ப்பு ஒன்றை வழங்கப்பட்டுள்ளதுடன், உடல் பாகங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய 9 எம்.எம். ரக கைத்துப்பாக்கி என்பன நீதிமன்றினூடாக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இச்சம்பவம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மாலபே பொலிஸார் இணைந்து இரு விசேட பொலிஸ் குழுக்கள் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைய அவரது மனைவி மற்றும் மூன்று மெய்பாதுகாவலர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனது மகன் சம்பந்தப்பட்ட நீதிமன்ற விவகாரம் ஒன்றின் காரணமாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக அவரது மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார். அத்தோடு, சம்பவத்துக்கு முன்னர் அவரைச் சந்திக்க வந்த நபர்கள் குறித்தும், இல்லத்திலுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாகக் கொண்டும் விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
பொலிஸ் சேவையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபரான சி.டி.விக்ரமரத்ன, பொலிஸ் வரலாற்றில் புலனாய்வு அதிகாரி ஒருவராகப் பணியைத் தொடங்கி பொலிஸ் மா அதிபர் நிலையை அடைந்த முதலாவது அதிகாரியாவார். 1963 மார்ச் 26 இல் பிறந்த இவர், கொழும்பு ஆனந்தா கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகளின் பழைய மாணவராவார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர், 1986 ஜூன் 16 இல் உதவி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்துகொண்டார். 2020 நவம்பரில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இவர் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்.
பொரளை தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது பூவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் எனப் பலரும் நேற்றும், நேற்று முன்தினமும் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உயரிழந்த பொலிஸ் மா அதிபரின் இறுதிக்கிரியைகள் திங்கட்கிழமை (20) பொரளை பொது மயானத்தில் இடம்பெற உள்ளதோடு , அதற்கான தயார்படுத்தல்களும் நிறைவடைந்துள்ளன.
அன்னாரது இறுதிக்கிரிகைள் மேலும் முழுமையான பொலிஸ் உத்தியோகபூர்வ மரியாதைகளுடன் திங்கட்கிழமை (20) பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.
சி.டி.விக்ரமரத்னவிற்கு அரச மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் இறுதிக்கிரியைகள்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space