அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் அடுத்த வாரம் சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டிற்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை மற்றும் கிரெம்ளின் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளன. 

சீனாவின் தெற்குத் தொழில்நுட்ப நகரமான ஷென்சென்னில் எதிர்வரும் 18–19 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள APEC உச்சிமாநாட்டிற்கு இடையே, எதிர்வரும் வியாழக்கிழமை 19 ஆம் திகதி  இம்மூன்று உலகத் தலைவர்களும் முதன்முறையாக ஒரே மேசையில் சந்தித்துப் பேசவுள்ளனர்.

உலகில் அணுவாயுதங்களைக் குறைப்பது தொடர்பாகத் தாம் விவாதிக்கவுள்ளதாகவும், அணுவாயுதப் பெருக்கம் மிகவும் ஆபத்தானது என ஜனாதிபதி ட்ரம்ப் கருதுவதாகவும் வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஒலிவியா வேல்ஸ் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இறுதி அணுவாயுத ஒப்பந்தம் காலாவதியாகி 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அணுவாயுதக் குறைப்புக்கு மேலதிகமாக, ஈரான் போர், உக்ரைன் நெருக்கடி மற்றும் உலகளாவிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கைத் தீர்மானிக்க நடைபெற்ற 'யால்டா மாநாட்டுடன்' இந்தச் சந்திப்பு ஒப்பிடப்படுவதை நிராகரித்த கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ், எவரும் தமது பார்வையை மற்றவர்கள் மீது திணிக்காமல் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் இச்சந்திப்பு அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.