இலங்கை சுங்கத் திணைக்களம் நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் 1,373 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது. இந்தத் தொகையானது ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டிருந்த இடைக்கால இலக்கை விட 313 பில்லியன் ரூபா கூடுதல் வருமானமாகும் என சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்ஞிஹேவா தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இவ்வாண்டுக்காக இலங்கை சுங்கத் திணைக்களத்துக்கு 2206.9 பில்லியன் ரூபா வருமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் 1060 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டுவதற்கே திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், திட்டமிட்ட இலக்கையும் தாண்டி 1373 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட இலக்குடன் ஒப்பிடுகையில் சுமார் 122 சதவீத வருமான உயர்வாகும்.
இந்த திடீர் வருமான அதிகரிப்புக்கு மோட்டார் வாகன இறக்குமதி அதிகரிப்பு, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல முக்கிய காரணங்கள் பின்னணியாக அமைந்துள்ளன. நடப்பு ஆண்டில் மோட்டார் வாகன இறக்குமதி படிப்படியாகக் குறையும் என்று ஆரம்பத்தில் கணிக்கப்பட்டிருந்த போதிலும், வருடத்தின் முதல் சில மாதங்களில் அவ்வாறான வீழ்ச்சி எதுவும் தென்படவில்லை.
கடந்த ஆண்டைப் போலவே பெருமளவிலான மோட்டார் வாகனங்கள் தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக, சுங்கத் திணைக்களத்திற்கு கணிசமான அளவு வருமானத்தைச் சேகரிக்க முடிந்துள்ளது.
அதேவேளை, டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தமையால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் ரூபா பெறுமதி அதிகரித்து சுங்க வரித் தளமும் விரிவடைந்துள்ளது. இந்த மாற்று விகித மாறுதல்களும் மேலதிக வருமானம் கிடைக்க வழிவகுத்துள்ளன.
இவற்றுடன், சுங்கத் திணைக்களம் கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைகள் காரணமாக வரி செலுத்தப்படாமலிருத்தல் மற்றும் வருமான இழப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டு, வரி வசூலிப்பு முறைகள் திறம்பட மாற்றப்பட்டுள்ளன.
மேலும், சட்டதிட்டங்களுக்கு உட்படாத இறக்குமதியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சுங்க முற்றுகைகள் மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு, பாரிய அபராதங்கள் விதிக்கப்படுவதன் ஊடாக அவர்கள் சட்டப்பூர்வமான வழிமுறைக்குக் கொண்டு வரப்படுகிறார்கள். இத்தகைய உள்வாரிச் சீர்திருத்தங்களும், கடுமையான சட்ட அமுலாக்க நடவடிக்கைகளுமே இந்த சாதனை வருமானத் திரட்டலுக்குப் பிரதான காரணங்களாக அமைந்துள்ளன என்றார்.
சுங்கத் திணைக்களத்துக்கு முதல் அரையாண்டில் 1,373 பில்லியன் ரூபா வருமானம் - சுங்கப் பேச்சாளர் தகவல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space