புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருப்பது விசாரணைகளில் வெளிவந்த சாட்சியங்களின் அடிப்படையிலானது. அவர் கடந்த காலத்தில் நாட்டுக்காக ஆற்றிய சேவைகளைக் காட்டி தற்போதைய குற்றச்சாட்டுகளை மூடிமறைக்க இடமளிக்க முடியாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.
மேலும் தனக்கு எதிரான அவதூறு வழக்கைச் சமரசம் செய்ய சுரேஷ் சலே விடுத்த கோரிக்கையைத் தான் நிராகரித்துவிட்டதாகத் தெரிவித்த அவர், சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருப்பது விசாரணைகளில் வெளிவந்த சாட்சியங்களின் அடிப்படையிலேயே அன்றி தன்னால் அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் திங்கட்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதற்கும், எனக்கு எதிரான அவதூறு வழக்குக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர் சாட்சியங்களின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் அவர் என்னைச் சந்தித்து, என்னால் தெரிவிக்கப்பட்ட கூற்றொன்றிலிருந்து அவரது பெயரை நீக்கினால் வழக்கை மீளப் பெறுவதாகக் கூறினார். ஆனால், நான் எனது கூற்றில் உறுதியாக இருப்பதால் சமரசக் கோரிக்கையை நிராகரித்துவிட்டேன். உண்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன்.
சஹ்ரான் குழுவினரின் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த அரசியல் சதித்திட்டம் மற்றும் திட்டமிட்டவர்கள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும். இது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமை. இந்த விசாரணைகள் தற்போது தீவிரமடைந்துள்ளதால் சிலர் பதற்றமடைந்துள்ளனர். அரசியல்வாதிகள் இதில் தலையிடக் கூடாது.
சுரேஷ் சலே உளவுத்துறையில் இருந்து நாட்டிற்காகப் பணியாற்றியதை மதிக்கிறோம். ஆனால் அதற்காக அவர் செய்த குற்றங்களை மறைக்க முடியாது. போரில் ஈடுபட்ட ஒருவர் உங்களது பெற்றோரைத் தண்டித்தால், அவர் இராணுவ வீரர்கள் என்பதால் விட்டுவிடுவீர்களா? சட்டம் அனைவருக்கும் சமம். அவர் தற்போது ஒரு சந்தேகநபர் மட்டுமே.
அவருக்கு ஆதரவாக நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டங்கள் விசித்திரமானவை. உண்ணாவிரதங்களுக்காக விசாரணைகளை நிறுத்தத் தொடங்கினால் நாட்டில் சட்டத்தை நிலைநாட்ட முடியாது. அதேபோல், அவருக்குச் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மருத்துவ அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்தும் நீதிமன்றமே இறுதி முடிவை எடுக்கும். எதற்கும் அஞ்சாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கான எங்கள் நீதிப் போராட்டம் தொடரும் என்றார்.
சுரேஷ் சலேயின் கடந்த கால சேவையைக் காட்டி குற்றங்களை மறைக்க இடமளிக்க முடியாது - அருட்தந்தை சிறில் காமினி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space